முக்கிய செய்திகள்:
முதலமைச்சரின் பசும்பொன் வருகைக்கு உற்சாக வரவேற்ப்பு:கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 9–ந்தேதி பசும்பொன் கிராமத்துக்கு வருகை தருவதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் 10 ஆயிரம் அ.தி.மு.க. தொண்டர்கள் சென்று வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என்று மாவட்ட செயலாளர் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பசும்பொன் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கடந்த 2010–ம் ஆண்டு பசும்பொன் கிராமத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களும், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வரி சுவாமிகளும் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினர்.இதையடுத்து தற்போது பசும்பொன்னில் உள்ள தேவரின் உருவச்சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வருகிற 9–ந்தேதி அவர் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் 10 ஆயிரம் அ.தி.மு.க.வினர் பசும்பொன் செல்கின்றனர்.

அங்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் நிகழ்ச்சியிலும், தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றிய கழகம், 7 நகர கழகம் மற்றும் 9 பேரூர் கழக நிர்வாகிகள் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்