முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தா.பாண்டியன் விளக்கம்

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர ரெட்டியும், ஏ.பி.பரதனும், மாநில செயலாளர் தா.பாண்டியனும் 2 ந்தேதி பிற்பகல் 1.30மணிக்கு முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.வரப்போகும் நாடாளு மன்ற தேர்தலில் பா.ஜ.க.காங்கிரஸ் கட்சிகளுக்கான மாற்று அணியை அமைத்து தேர்தலில் போட்டியிட இரு கட்சிகளும் முடி வெடுத்துள்ளன என்பதை செய்தியாளர்களிடம் பேசிய இரு கட்சி தலைவர்களும் தெளிவாக கூறியதுடன் இன்று (3 ந்தேதி) மார்க்சிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் கூட்டணி பற்றிப் பேசி உடன்பாடு காண வருகிறார் என்பதும் அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் பணிகள் பற்றி பின்னர் பேச இருக்கிறோம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 3 ந்தேதி ஒரு ஆங்கில பத்திரிகையில் முதல் பக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி இரு தொகுதிகளைக் கேட்டதாக கட்சியைச் சேர்ந்தவர் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த யாரும் அத்தகைய செய்தியை, எந்தப் பத்திரிகைக்கும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அதற்கான பேச்சே நடத்தப் படவில்லை. எனவே ஆதாரமற்ற அந்தச் செய்தியை சந்திப்பின்போது இருந்தவன் என்ற முறையில் மறுக்கிறேன்.

இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படும் செய்திகளை புறக்கணிக்குமாறும், கட்சிப் பத்திரிகையான ஜனசக்தியில் வெளியிடப்படும் செய்தியை மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டுமென்றும் கட்சி தோழர்களை கேட்டுக் கொள்வதுடன் குழப்பங்களுக்கு இடம் தராமல் தேர்தல் பணிகளில் ஈடுபட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்