முக்கிய செய்திகள்:
சிங்களப்படையினரின் செயல்பாடுகள் தொடர்கதையாகிவிட்டன:டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்ககடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அலங்காரம் என்பவருக்கு சொந்தமான விசைப் படகு கடலில் மூழ்கிவிட்டது. அப்படகில் இருந்த 4 மீனவர்கள் கடலில் மூழ்கித் தவித்த நிலையில் அவர்களை மற்ற மீனவர்கள் காப்பாற்றியதால் உயிர் பிழைத்துள்ளனர். இதுதவிர 50 க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்து விட்டன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கச்சத்தீவு அருகே நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சிங்களப் படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையின் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைக்கும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப்படையினரின் செயல்பாடுகள் தொடர்கதையாகிவிட்டன. மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு தரப்பு மீனவர்களும் கடந்த மாதம் 27 ஆம் தேதி சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தினர். அப்பேச்சுக்களில் வங்கக்கடலில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பாதிப்பு இல்லாமல் மீன் பிடிப்பதற்கான பொதுத் திட்டம் முன்வைக்கப்பட்டு அதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். அந்தத் திட்டத்திற்கு இரு நாட்டு அரசுகளும் ஒப்புதல் அளித்த பிறகு அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என மீனவர் அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிவடைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழக மீனவர்கள் இரு முறை கைது செய்யப்பட்டுள்ளனர்; ஒரு முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மீனவர்களிடையே சுமூகமான சூழல் உருவாகியுள்ள நிலையில், அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த தாக்குதல் மற்றும் கைதுகளை சிங்களக் கடற்படையினர் நடத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.

இதேநிலை தொடர்ந்தால் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே, முடிவின்றித் தொடரும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்–அமைச்சர் கடிதம் எழுதுவதும், ஆண்டுக்கு இத்தனை கடிதங்களை எழுதியதாக புள்ளி விவரங்களை வெளியிட்டு பெருமை பேசிக்கொள்வதும் எந்த வகையிலும் பயனளிக்காது.

மாறாக, சென்னையில் இருதரப்பு மீனவர்களிடையே நடைபெற்ற பேச்சுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை விரைவாக பெற்று செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு மாநில அரசு அரசியல் நெருக்கடி தர வேண்டும். இதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, வங்கக்கடலில் இருதரப்பு மீனவர்களும் நிம்மதியாக மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் அவர்களின் படகுகளுடன் மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்