முக்கிய செய்திகள்:
மினி பேருந்துகளில் 100 நாட்களில் 37 லட்சம் பேர் பயணம்:செந்தில்பாலாஜி தகவல்

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அம்பத்தூர் எம்.எல்.ஏ, வேதாச்சலம் (அ.தி.மு.க.) கேட்ட கேள்வி வருமாறு:–

கள்ளிக்குப்பம் பகுதியில் மாநகர போக்குவரத்து கழக பணிமனை மற்றும் பஸ்நிலையம் அமைக்கப்படுமா? என்றார்.

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:– மாநகர போக்கு வரத்து கழக பணிமனை, பஸ்நிலையத்தை கள்ளிக் குப்பத்தில் அமைக்க தேவையான நிலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலம் கிடைக்கப் பெற்றதும் அங்கு பணிமனை அமைக்கப்படும்.வேதாச்சலம்:– அம்பத்தூர் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி ஆகும். ஏற்கனவே முதல்– அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கள்ளிக் குப்பத்தில் பணிமனை அமைக்க 15 ஏக்கர் அரசாங்க இடத்தை தேர்வு செய்து நகராட்சி மூலம் அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே நிறைவேற்றித் தரும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி:– மக்களை நேசிக்கும் தலைமை மக்களை நேசிக்கும் தலைமையாக புரட்சித்தலைவி அரசு விளங்கி வருகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்காக 2½ ஆண்டுகளில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து பணிமனை இல்லையோ அங்கெல்லாம் புதிய பணி மனை அமைக்குமாறு முதல்–அமைச்சர் உத்தர விட்டிருந்தார்.

இதன்படி 68 புதிய பணி மனைகளை அமைக்க முதல்– அமைச்சர் உத்தர விட்டதின் பேரில் பணிகள் நடந்து வருகிறது. கள்ளிக் குப்பத்தில் நிலம் கிடைத்ததும் பணிமனை அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் 50 சிறிய பஸ்களை முதல்– அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்ததில் இருந்து அந்த பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 23.10.2013 முதல் 30.1.2014 வரை 100 நாட்களில் சிறிய பஸ்களில் 36 லட்சத்து 96 ஆயிரத்து 639 பேர் பயணம் செய்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனை திட்டமாகும். இதன்மூலம் ரூ.2 கோடியே 52 லட்சத்து 89 ஆயிரத்து 645 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்