முக்கிய செய்திகள்:
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:,நான் செய்த ஏற்பாட்டின் படி தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே கடந்த 27.1.2014 அன்று சென்னையில் நேரடி பேச்சு வார்த்தை நடந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட பயனாக கடந்த 2 வாரங்களில் 295 தமிழக மீனவர்களை அவர்களது 45 படகுகளுடன் சிறைகளில் இருந்து இலங்கை அரசு விடுவித்தது.

என்றாலும் அந்த நல்லெண்ண சூழ்நிலை கடந்த 29.1.2014 நடந்த சம்பவம் மூலம் முற்றிலுமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது. அன்றிரவு பாக்ஜலசந்தி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றிருந்த தமிழக மீனவர்கள் 38 பேரை கடத்திச் சென்று இத்தகைய சூழ்நிலையை இலங்கை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 38 மீனவர்கள் கடந்த 29.1.2014 அன்று இரவு தங்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை அவர்கள் 38 பேரையும் 6 எந்திரப் படகுகளுடன் சட்ட விரோதமாக கடத்திச் சென்று விட்டது.

சமீபத்தில் இரு நாட்டு மீனவ சமூதாயத்தினரை பேச வைத்து, ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் 38 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இத்தகைய கடத்தல் மற்றும் கைது நடவடிக்கைகள் பாக்ஜலசந்தி மாவட்டங்களில் உள்ள தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.

இரு நாட்டு மீனவர்கள் பேச்சு வார்த்தை மூலம் ஏற்படுத்தப்பட்ட சுமூக சூழ்நிலையை பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் தினசரி மீன்பிடி தொழில் தொடர்வதற்கு தீர்வு காணவும், அப்பாவி இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கடத்தல் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று இலங்கையிடம் தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கை கடற்படையின் அத்துமீறல்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

மேலும் இலங்கை தன் கடற்படையிடம் சட்ட விரோதமாக அப்பாவி தமிழக மீனவர்களை கைது செய்து கடத்தி வரக்கூடாது என்று உத்தரவிட தாங்கள் வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, தூதரக அளவில் தொடர்பு கொண்டு 29.1.2014 அன்று 6 படகுகளுடன் கடத்தப்பட்ட 38 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்