முக்கிய செய்திகள்:
தமிழக சட்டபேரவையில் இருந்து தி.மு.க.வெளிநடப்பு

தமிழக சட்டசபை இன்று பகல் 12 மணிக்கு கூடியதும் கவர்னர் ரோசையா உரை நிகழ்த்த தொடங்கினார்.

அப்போது தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து கையில் வைத்திருந்த குறிப்புகளை வாசிக்க தொடங்கினார்.அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மைக் இணைப்பு வழங்கப் படவில்லை. ஆனால் மைக் இல்லாமல் சிறிது நேரம் பேசினார். பின்னர் கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதே போல் மனித நேய மக்கள் கட்சியின் 2 உறுப்பினர்களும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியும் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.ஆனால் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ராமசாமி வெளிநடப்பில் கலந்து கொள்ளாமல் சபையிலேயே இருந்தார்.

வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக சட்டம்–ஒழுங்கு பிரச்சினை வாட்டி வதைக்கும் ‘மின்வெட்டு’, குறுவை சம்பா பயிர் சாகுபடிக்கு உரிய நேரத்தில் தேவையான அளவு காவிரி நீரை பெற்றுத்தர தவறியது, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காதது உள்பட பல்வேறு பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எதிர்க்கட்சிகள் மீதும் அடுக்காடுக்கான வழக்குகள், இட ஒதுக்கீடு கொள்கையை மதிக்காதது, நீதிமன்ற கண்டனங்கள் உள்பட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கவர்னர் உரையை தி.மு.க. புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.

போதிய மழை பெய்யாததால் 24 மாவட்டங்களில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலையில்லாத நிலையில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2½ வருடம் முடிந்து விட்டது. எதிர்க்கட்சியின் கடமை என்ற முறையில் சென்ற ஆண்டு நாங்கள் கவர்னர் உரையின் போது சுட்டிக் காட்டிய குறைகள் எதுவும் சரி செய்யப்படவில்லை. மேலும் குறைகள்தான் பெருகி இருக்கின்றன.

அரசு சார்பில் லட்சக் கணக்கில் செலவிடப்படும் திட்டங்களுக்கான அறிவிப்புகள் கூட முதல்– அமைச்சர் பெயரில் தான் வருகின்றன.கவர்னர் உரையிலும் நிதி நிலை அறிக்கையிலும் இணைக்கப்பட வேண்டிய பல அம்சங்கள் முதல்–அமைச்சர் பெயரால் முன் கூட்டியே அறிவிக்கப்படுகிறது.

எதிர்கட்சியினரை முடக்கி விடும் நோக்கில் அவர்கள் மீது பழிவாங்கும் வகையில் வழக்குகள் போடப்படுகிறது. எனவே இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்

 

மேலும் செய்திகள்