முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம்:முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆவது உறுதி.சரத்குமார் பேட்டி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:,

நெல்லையில் பிப்ரவரி 16–ந்தேதி சமத்துவ மக்கள் கட்சியின் 2–வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல் வியூகம் குறித்தும் விவாதிக்கப்படும்.நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.வின் வெற்றிக்காக 40 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ‘சீட்’ கேட்பது குறித்த எண்ணம் இப்போது இல்லை. முதல்– அமைச்சர் என்ன நினைக்கிறாரே அதற்கேற்ப நாங்கள் செயல்படுவோம்.எனவே முதல்–அமைச்சர் வாய்ப்பு கொடுக்கும்போது அதுபற்றி யோசிப்போம். கடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதியை எங்களுக்கு ஒதுக்கினார். இன்று வரை நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம்.

ஆகவே ‘சீட்’ என்ற எல்லையை நோக்கி பயணிக்கவில்லை. கூட்டணி தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கியது அவர்களது கட்சி விவகாரமாகும். அது அவர்களது உள்கட்சி பிரச்சினை.பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து பார்க்கும்போது தந்தை, மகனுக்கு இடையே நடந்த பிரச்சினையாகவே கருதுகிறேன். அழகிரி நீக்கத்தால் அங்கு எந்த மாற்றமும் நடந்து விடாது. தி.மு.க. ஒரு சக்தி இழந்த கட்சியாகத்தான் காணப்படுகிறது.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆவது உறுதி. நரேந்திர மோடி பிரதமராக ஆதரவு கிடைக்காது. மத்தியில் எந்த கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும்போது தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமராவார். அதனால்தான் நாற்பதும் நமதே என உறுதியாக நம்புகிறோம். ஆம்ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்