முக்கிய செய்திகள்:
பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்:மு.க.ஸ்டாலின் உருக்கம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தலைவர் கலைஞர் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த உருக்கமான பேட்டிக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் சிலர் அண்ணன் அழகிரியின் உருவ பொம்மையை எரித்ததாக ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன்.

அரசியல் நாகரிகத்தைச் சவாலுக்கு அழைக்கும் இப்படிப்பட்ட செயலைகழகத்திலே யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. இது காலம் காலமாக நம்முடைய கழகத்தில் கண்ணும் கருத்துமாகப் பேணப்பட்டு வரும் கட்டுப்பாட்டையும், பண்பாட்டையும் முறியடிக்கின்ற காரியமாகும்.

தலைவரும், பொதுச் செயலாளரும் ஆழ்ந்து சிந்தித்து முறைப்படி நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில், ஆர்வம் மிக்க ஒரு சில தொண்டர்கள் ஆத்திரத்திலும், அவசரத்திலும் ஈடுபடும் இத்தகைய செயல்பாடுகள் இயக்கத்தின் கட்டுக்கோப்பினைப் பாதிக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் என்னைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு, தலைவர் எந்த அளவிற்கு மனக் காயம் அடைந்திருக்கிறாரோ, அதைப் போல அவரைப் பற்றி நான் கூறியிருந்தாலும் அதே அளவுக்கு வேதனையைத் தான் அனுபவித்திருப்பார்.

அதைத் தான் அவரது பேட்டியில் இருவரும் என் மகன்கள் என்பதை விட இருவரும் கழக உறுப்பினர்கள் என்று தெரிவித்தார்கள். தலைவருக்கு எல்லாவற்றையும் விட கழகமே முதன்மையானது, உயர்ந்தது என்பதை அனைவரும் உணர வேண்டும்.அழகிரி என்னைப் பற்றிக் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; பெரிதுபடுத்தவும் விரும்ப வில்லை. பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்.

தலைவர் அந்தச் செய்தியை எதார்த்தமாக வெளிப்படுத்தியதே போதும். எனவே கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினையை மேலும் ஊதிப் பெரிதாக்குகின்ற வகையில், அவருடைய உருவ பொம்மையை தாக்குகின்ற செயலிலோ, எரிக்கின்ற செயலிலோ, சுவரொட்டி ஒட்டுகின்ற செயலிலோ ஈடுபட்டால், அதுவும் கட்சியின் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகி விடும்.

உணர்ச்சிப் பெருக்கால் செய்யப்படும் காரியங்கள் பத்திரிகைகள் நம்மைப் பற்றித் தாறுமாறாக எழுதுவதற்கு உணவாகி விடும் என்பதோடு பொதுமக்களுக்கு நம்மீது வெறுப்புணர்வு தோன்றவும் காரணமாகி விடும். எனவே கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டு விட்டு, திசை திருப்பிடும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதற்குப் பலியாகி விடாமல், அடுத்து நாம் சந்திக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், திருச்சியில் நடைபெறவுள்ள பத்தாவது கழக மாநில மாநாட்டினை சிறப்பாக நடத்துதல் போன்ற தலைவர் பெரிதும் போற்றும் ஆக்கப் பூர்வமான பணிகளில் கருத்தொன்றி கவனத்தைச் செலுத்திட வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்