முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே. ரெங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.மேல்– சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. முதல் நாளே தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ் ஆகிய 4 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ரங்கராஜனும் நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது.

மேல்– சபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு பரிசீலனை போது அது நிராகரிக்கப்படும்.

இதனால் மேல்– சபை தேர்தலில் போட்டி இருக்காது. தற்போது மனு செய்துள்ள 4 அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஒரு தி.மு.க. வேட்பாளர், ஒரு மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆகிய 6 பேரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு விடுவார்கள்.

 

மேலும் செய்திகள்