முக்கிய செய்திகள்:
15 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் - ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உயர் சிகிச்சை மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன. சில நேரங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ள மாவட்டங்களுக்கு மேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது.

எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதனை செயல்படுத்தும் பொருட்டு, 15 மாவட்ட மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 105 சிறப்பு மேல் சிகிச்சை மருத்துவர்கள், 183 சிறப்பு மருத்துவர்கள், 60 மருத்துவர்கள், 3 பல் மருத்துவர்கள் மற்றும் 443 செவிலியர்கள், 14 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 18 நுண்கதிர்வீச்சாளர் பணியிடங்களை உருவாக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நுண்கதிர்வீச்சாளர் இல்லாத 98 அரசு மருத்துவமனைகளில் நுண்கதிர்வீச்சாளர்களை நியமனம் செய்வதற்கும், ஆய்வக நுட்பனர்கள் இல்லாத 13 அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு ஆய்வக வல்லுநர் வீதம் 13 ஆய்வக நுட்பனர்களை நியமனம் செய்வதற்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மகப்பேறு மற்றும் சிசு நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அவசர தாய்-சேய் நல மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி தாய்மார்கள் மரண விகிதம் மற்றும் சிசு மரண விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது 105 அரசு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த அவசர கால தாய்-சேய் நல மையங்களாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் கர்ப்பிணித் தாய்மார்கள் அதிகமாக பயன்படுத்தும் 55 மருத்துவமனைகளில் ‘மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு’ ஒன்றை தொடங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதற்காக ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 4 செவிலியர்கள் வீதம் 220 செவிலியர்களை நியமனம் செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தாய்-சேய் நலனைக் காக்கும் வகையில், சேலம் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தாய்-சேய் நலப் பிரிவுகளையும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையையும், தாய்-சேய் நல மேலாண்மை சிகிச்சை மையங்களாக தரம் உயர்த்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.இம்மையங்கள் சிறப்பாக செயல்படும் பொருட்டு, கூடுதலாக 49 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 110 செவிலியர்கள் நியமனம் செய்யவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மகப்பேறு காலத்தில் உயர் கவனிப்பு தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்களை கவனித்து உடனடியாக தகுந்த சிகிச்சை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக 9 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு பிரிவுகளில் தலா 4 மருத்துவர்கள் வீதம் 36 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இதனை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 84 மருத்துவர்களை கூடுதலாக நியமனம் செய்வதற்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்–அமைச்சர் ஜெயலலிதா மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மூலம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்தின் கீழ் செயல்பட்டு வரும் 56 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புற மற்றும் உள் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் பொருட்டு, கூடுதலாக 167 செவிலியர்களை நியமனம் செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு வகுப்பிலும் 645 பேர் அரசு பயிற்சி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.

இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் செவிலியர் பட்டயப்படிப்பு பயிலும் அரசிடமிருந்து உதவித் தொகை பெரும் செவிலியர் பயிற்சி மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது வழங்கப்படும் முதலாம் ஆண்டு கல்வி உதவித் தொகை, 400-ரூபாயிலிருந்து 600 ரூபாய் ஆகவும், இரண்டாம் ஆண்டு உதவித் தொகை 440-ரூபாயிலிருந்து 700-ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு உதவித் தொகை 480-ரூபாயிலிருந்து 800-ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு கூடுதலாக 60 லட்சத்து 37 ஆயிரத்து 200 ரூபாய் செலவினம் ஏற்படும். மொத்தம் 1,935 மாணவியர்கள் ஆண்டு தோறும் பயன் பெறுவார்கள்.

தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தியுள்ளார். அதன் படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை, முகாம்களில் வசிக்காது, உள்ளூர் காவல் நிலையங்களில் அகதிகளாக பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 13,289 குடும்பங்களைச் சார்ந்த 34,826 இலங்கைத் தமிழர்கள் பயன் அடைவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்