முக்கிய செய்திகள்:
ஜெயலலிதாவின் உத்தரவால் சிறுபான்மையினர் வளர்ச்சி நிதி உயர்வு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது. மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தியது. வக்பு வாரியத்தின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க மானியத் தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது. நிலுவையிலுள்ள ஓய்வூதிய பலன்களை வழங்க ஒட்டு மொத்தமாக 3 கோடி வழங்கியது.

ஹஜ் குழுவிற்கு வழங்கும் அரசு மானியத்தை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நன்கொடைக்கு ஈடாக அரசு வழங்கும் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியது. ஆண்டு தோறும் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள 1 கோடி ரூபாய் வழங்கியது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களின் நலனுக்காக தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் முகமை நிறுவனமாக தமிழகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுய தொழில் கடன்களை வழங்கி வருகிறது.

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்திற்கு மாநில அரசு செலுத்தும் பங்கு மூலதனம் அதிகரிக்கப்படும்போது அதற்கேற்ப அதிக அளவிலான சிறுபான்மையினர் பயனடைய கடனுதவிகள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வழியாக வழங்க வழி ஏற்படும். எனவே 2012–ம் ஆண்டில் கூடுதலாக 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பங்கு மூலதனம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி தேசிய சிறு பான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தில் தமிழகத்தின் பங்கு மூலதனத் தொகை 7 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. தற்போது மாநில அரசின் பங்குத் தொகையாக மேலும் 1 கோடி ரூபாய் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் பங்கு மூலதனம் 8 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயரும்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சிறுபான்மையினர் என வகைப்படுத்தப்பட்ட முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி மற்றும் பவுத்தர் ஆகியோருக்கு தொழில் தொடங்க அதிக அளவில் கடனுதவி வழங்க வழிவகை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்