முக்கிய செய்திகள்:
தமிழ்நாடு புவிசார் தகவல்கள் அமைப்பு உருவாக்க:ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,அரசின் பல்வேறு துறைகளில் துறை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு தேவையான இடம் சார் மற்றும் இடம் சாராத தரவுகளை சீராக இணைக்கும் புவிசார் தகவல்கள் மிகவும் அவசியமானதாகும்.

தற்போது தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் புவிசார் தகவல்கள், பல்வேறு மென்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்குமான ஒரு பொதுவான கட்டமைப்பு, பொதுவான தரம் ஆகியவை இதுவரை இல்லாமல் உள்ளது.

இந்த குறைபாட்டை நீக்கும் வகையில் தமிழ்நாடு புவிசார் தகவல்கள் அமைப்பு ஒன்றினை உருவாக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இத்திட்டத்தின் மூலம் இடம்சார் தரவுகளுக்கான ஒரு பொதுவான கட்டமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் பல்வேறு அரசுத் துறைகளின் புவிசார் தகவல்களை மக்களுக்கு பயன்படும் விதத்தில் பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்திட முடியும்.

இது தவிர அரசின் அனைத்து மட்டங்களிலும் சிறந்த நிர்வாகத்தினை உறுதி செய்யும் புவியியல் சார்ந்த தகவல்களை வெளிப்படையாக பரிமாறிக் கொள்ளவும் இது உதவி செய்கிறது. இப்பொதுவான கட்டமைப்பின் மூலம் அரசின் பல்வேறு துறைகள் இக்கட்டமைப்பினை உருவாக்கிட தனித்தனியே செலவினங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க முடியும்.

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் மூலம் அரசுத் துறைகள் தங்களுக்கு தேவையான வரைபடங்களை பதிவிறக்கம் செய்து உபயோகிக்க வழி வகை செய்யப்படும். தமிழ் நாடு புவிசார் தகவல் அமைப்பு அரசுத் துறைகள் பொதுமக்களுக்கான சேவைகளை திட்டமிடுதல், முடிவு எடுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை மேலும் சிறப்புற செய்வதற்கு ஓர் கருவியாக பயன்படும்.

இந்த புவிசார் தகவல் அமைப்பு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக தலைமையகத்திலும், இரண்டாம் கட்டமாக மாவட்ட அளவிலும் விரிவுபடுத்தப்படும்.தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பினை முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மூலதனச் செலவில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஏற்படுத்துவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 

 

மேலும் செய்திகள்