முக்கிய செய்திகள்:
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய புதிய கண்டு பிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சிப் பெறும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியேயாகும்.இத்தகைய உயர்கல்வியின் வளர்ச்சிக்கும், தொழிற் கல்வியின் வளர்ச்சிக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் தனியாரால் நடத்தப்பட்டு வந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை, பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில் செயல்படவும், முறையாக நிர்வாகம் செய்யப்படுவதற்காகவும், பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகத்தினை சீரமைப்பதற்காகவும், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை அரசே தன்னகத்தே எடுத்துக் கொண்டது.

இதன் காரணமாக, நடப்பு கல்வியாண்டில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு முற்றிலும் வெளிப்படையான முறையில், கல்வித் தகுதி மற்றும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மற்ற பல்கலைக்கழகங்களைப் போல மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, குறிப்பாக நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து 1,150 மாணவ–மாணவிகள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற வகையில் சேர்ந்துள்ளனர்.இந்த பல்கலைக்கழகத்தில், இதுவரை மற்ற அரசு பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ–மாணவியருக்கான கல்வி கட்டணச் சலுகை அளிக்கப்படவில்லை.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்ற அரசு பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல், இந்த பல்கலைக்கழகத்திலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ–மாணவியருக்கு கல்வி கட்டணச் சலுகையை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கென 1 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு 1,150 மாணவ மாணவியர் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்