முக்கிய செய்திகள்:
தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, 105 ஏக்கர் நிலப்பரப்பில் படாளம் கிராமத்தில் அமைக்கப்பட்டு, 18.3.1961 முதல் கரும்பு அரவையைத் துவக்கி, சர்க்கரை உற்பத்தி செய்து நல்ல லாபத்தில் இயங்கி வந்தது.

ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து, வங்கிக் கடன் பெற்றுத் தந்ததால், தரமான விதைக் கரணைகள், கலப்பு உரம் கிடைக்கச் செய்ததால், விவசாயிகள் கரும்பை அதிக மகசூல் செய்து ஆலைக்கு வழங்கி வந்தனர்.

20 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து பெறப்படும் கரும்புக்கான போக்குவரத்துச் செலவை ஆலையே ஏற்றுக் கொண்டது. கரும்பு பயிரிடுவதன் நுணுக்கங்களையும், இதர சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளையும் அறியும் வண்ணம், வெளி மாநிலங்களுக்கு கரும்பு விவசாயிகளை அழைத்துச் சென்று பயிற்சி அளித்ததன் விளைவாக, ஆலை நிர்வாகத்திற்கும் கரும்பு விவசாயிகளுக்கும் ஆரோக்கியமான நல்லுறவு தொடர்ந்து வந்தது.

நல்ல லாபத்துடன் இயங்கி வந்த மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை, 1996 ஜனவரி முதல் மாவட்டத்தின் பாதி வட்டங்களைப் பிரித்து, அங்கு விளையும் கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கு அரசால் ஒதுக்கப்பட்டது. இதனால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குத் தேவையான கரும்பு வரத்து குறைந்து, அரவை பாதிக்கப்பட்டு, ஆலை இயக்கப்படுவது அடிக்கடி நிறுத்தப்பட்டதால் இயந்திரம் பழுது அடைந்து நின்று போனது.

மொத்தத்தில் தனியார் சர்க்கரை ஆலைக்காக, நல்ல லாபத்தில் இயங்கி வந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை நலியச் செய்து முடக்கி, சிலர் ஆதாயம் அடைந்தனர். 2001 ஆம் ஆண்டு முழுவதுமாக நிறுத்தப்பட்ட நிலையில், ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்க்க இருந்ததை அறிந்து, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டேன்.கூட்டுறவு சங்கத்தினரும் உறுதியாக எதிர்த்ததன் விளைவு, நீதிமன்ற தலையீட்டின் பேரில் வேறு வழி இன்றி, 2009 ஆம் ஆண்டு ஆலை புதுப்பிக்கப்பட்டு இயங்கி வந்தது.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப் போன்று, 2013–14 ஆம் ஆண்டு கரும்பு பயிரிட்டு, கடந்த டிசம்பர் மாதமே சர்க்கரை அரவைக்குத் தயாராகியும், ஆலை நிர்வாகம் ஆலையை இயக்காமல், கரும்பு வெட்ட அனுமதி தராமல் கரும்பு முதிர்ந்து ஈரப்பதம் குறைந்து வயலிலேயே காய்ந்து கருகிக் கொண்டு இருக்கிறது. கரும்பு பயிரிடும்போது இருந்த மகிழ்ச்சி அறுவடையின் போது இல்லாமல், தற்போது கரும்பு விவசாயம் கசந்து போய் உள்ளது.

கரும்பு விவசாயம் செய்ய கடன்மேல் கடன் வாங்கி, வட்டி கட்ட முடியாமல் விரக்தியுடன் விளிம்பில் உள்ளனர், நல்ல லாபத்தில் இயங்கி வந்த மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்குவதில் உள்ள பிரச்சனையைக் களைந்து, உடனடியாக உற்பத்தியைத் துவக்கிட வேண்டுகிறேன்.

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால், கரும்பு விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வராமல் இருக்கின்றனர். எனவே, கரும்புடன் ஒன்றுக்கு 3,500 கொடுத்து, கரும்பு விவசாயத்தை ஊக்குவித்திட வேண்டும். இல்லையெனில் தற்போது அறிவித்துள்ள டன் ஒன்றுக்கு 2650 ரூபாயை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கி விட்டு, கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகமே வெட்டுக் கூலியையும், போக்குவரத்துச் செலவையும் கொடுத்திடக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்