முக்கிய செய்திகள்:
40 தொகுதிகளிலும் விருப்ப மனு:விஜயகாந்த் அறிவிப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் இந்திய நாட்டில் பதினாறாவது பாராளுமன்ற தேர்தல் வெகு விரைவில் நடைபெற உள்ளது.

அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளு மன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 23.01.2014 வியாழக்கிழமை அன்று காலை 10.30மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில்பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 01.02.2014 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 20 ஆயிரமும், தனி தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள பதினாறாவது பாராளுமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்