முக்கிய செய்திகள்:
52 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வன நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த:ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,“காடு செழித்திருந்தால் தான் நாடு செழித்திருக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. வனங்கள் தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நீர்வளப் பயன்கள், மண் வளப்பாதுகாப்பு, கரியமில வாயு சமநிலை, தூய காற்று உருவாக்குதல், பல்லுயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் ஒட்டு மொத்த சுற்றுச்சூழல் சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றன.வனங்களை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வாழும் மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் வனங்கள் உறுதுணையாக அமைந்துள்ளன.

வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள வனம் சார்ந்து வாழ்வோர் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும், தரங்குன்றிய வனங்களை அவர்களது பங்கேற்புடன் இயல்பான நிலைக்கு கொண்டு வரவும், மிகப்பெரிய அளவிலான கூட்டு வன நிர்வாக அடிப்படையில் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டம் நிலை–2 என்ற திட்டம் 567 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவியுடன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் 2012-–2013 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த திட்டத்தின் செயல்பாடுகளை நிலை நிறுத்த, ஐப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் தொகையில் எஞ்சியுள்ள தொகை மற்றும் மாநில அரசின் நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி 2013–2014 மற்றும் 2014–2015 ஆம் ஆண்டுகளில் 52 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு வன நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துதல், நிறுவன திறன் மேம்பாடு, சமுதாய சொத்துக்களை மேம்படுத்துதல், நிலைத்தன்மைக்கான ஆலோசனைப் பணிகள், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்காணித்தல், வன விரிவாக்க மையங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்