முக்கிய செய்திகள்:
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வைகோ அவசர கடிதம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது,இலங்கையில் ராஜபக்சே அரசு நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலால், தங்கள் உயிர்களைப் பாதுகாக்க, ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்றனர். இப்படிப் பயணித்தபோது படகுகள் கவிழ்ந்து பலர் கடலுள் மூழ்கி மடிந்தனர்.

இதில், 46 ஈழத்தமிழர்கள், அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, ஆஸ்திரேலிய அரசுப் பாதுகாப்பு உளவு நிறுவனம், அடைக்கலம் தேடி வந்த அவர்களைச் சிறையில் அடைக்கச் செய்தது. ஈழத்தமிழ் அகதிகள், இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தோடு தொடர்பு உடையவர்கள் என்று அந்நாட்டின் பாதுகாப்பு உளவு அமைப்பு, குற்றம் சாட்டி உள்ளது.

அடிமை விலங்குகளில் இருந்து தங்கள் தாயகம் விடுபட, சுதந்திரம் பெறத் தமிழர்கள் ஏங்குவதும், அதற்காக அக்கறை காட்டுவதும், எந்தவிதத்திலும் தவறு அல்ல. இந்த அகதிகளால் ஆஸ்திரேலிய மக்களுக்கோ, அரசுக்கோ எந்த இடையூறும் கிடையாது.அனைத்து உலக ஒப்பந்தங்களின்படி, தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஆஸ்திரேலிய அரசுக்கு உண்டு. அதற்கு மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைத்து இருப்பதால், அவர்கள் தாங்க முடியாத மனத்துன்பத்திற்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி உள்ளனர். அதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஈழத்தமிழ் அகதி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலிய அரசு, தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளது. அப்படி அவர்கள் அனுப்பப்பட்டால், அங்கு சித்திரவதைக்கு உள்ளாகிக் கொல்லப்படுவார்கள்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், உரை ஆற்றிய ஆஸ்திரேலியப் பிரதமர், இலங்கை அரசுக்குச் சாதகமாக, அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக, அரசு நடத்தும் தாக்குதலையும், சித்திரவதையையும் நியாயப்படுத்திப் பேசினார். மறுநாளே, இலங்கை அரசோடு ஆஸ்திரேலிய அரசு வணிக ஒப்பந்தம் போட்டு, இலங்கைக் கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் வழங்கி இருக்கிறது.இன்றைய நாகரீக உலகில், பல ஜனநாயக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொண்டது. இலங்கைத் தீவில், சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலையை உணர்ந்து கொண்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏராளமான தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு அனுப்பியதால், அவர்களுள் பலர் துன்பத்திற்கு ஆளாகி மடிந்தனர். எனவே, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள 46 தமிழ் அகதிகளையும் அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்ப விடாமல் தடுத்து, அவர்கள் உயிர்களைப் பாதுகாக்க உரிய தேவையான நடவடிக்கைகளை, இந்தியப் பிரதமர் தூதரக உறவுகள் மூலமாக உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

 

மேலும் செய்திகள்