முக்கிய செய்திகள்:
தி.மு.க.–விடுதலை சிறுத்தைகள் மீது ராமதாஸ் குற்றசாட்டு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் மிகவும் கவலையளிக்கின்றன.

பா.ம.க. வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வன்முறையில் தூண்டி விடுகின்றன.பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தும் வன்முறை கும்பல்கள், அதனால் ஏற்படும் பதற்றத்தை பயன் படுத்தி பா.ம.க. கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, விளம்பர பதாகைகளை சேதப்படுத்துவது, பிரச்சாரத்திற்கு செல்லும் பா.ம.க. வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் அரியூர், ஆரணி தொகுதியிலுள்ள குண்ணத்தூர், புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலைகள் திட்டமிட்டே சேதப்படுத்தப்பட்டு, பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.அரக்கோணம் தொகுதிக் குட்பட்ட குடிமன்னூரில் பா.ம.க. வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வேலுவின் கார் மீதும், விழுப்புரம் மாவட்டம் மிட்டாமண்டகப்பட்டு என்ற இடத்தில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் மீதும், நாகை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் மயிலாடுதுறை பா.ம.க. வேட்பாளர் அகோரம் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

உண்மையில் தி.மு.க. தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திவிட்டு, பா.ம.க.வினர் மீது வீண் பழியை சுமத்தி வருகின்றனர். இது குறித்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரிகளே இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஆதரவாக பெரும் எழுச்சி ஏற்பட்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் வன்முறையை தூண்டும் செயல்களில் தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் ஈடுபட்டிருக்கின்றனர்.

பா.ம.க. வேட்பாளர்கள் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இவர்கள், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்கு சேகரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இன்னொருபுறம் வன்முறையை தூண்டி பா.ம.க.வின் செல்வாக்கை சீர்குலைக்க முயல்கின்றனர். இவ்வாறு செய்வது தி.மு.க. வுக்கு புதிதல்ல. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்போதே பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக இந்த அளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால், தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

எனவே, அம்பேத்கர் சிலைகளை மையமாக வைத்து அரங்கேற்றப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்தவும், மக்களவைத் தேர்தல்களை அமைதியாக நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை தடுப்பதற்கான காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பா.ம.க. தயாராக உள்ளது. அம்பேத்கர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதால் தான் தமிழ்நாட்டில் மிகஅதிக எண்ணிக்கையில் அவரது சிலைகளை நான் திறந்து வைத்திருக்கிறேன்.எனது தைலாபுரம் தோட்ட வளாகத்திலும் அவரது சிலையை திறந்து பாதுகாத்து வருகிறேன். தமிழகத்தில் எந்த ஓரிடத்திலும் அம்பேத்கரின் சிலையோ அல்லது மற்ற தலைவர்களின் சிலைகளோ அவமதிக்கப் படக்கூடாது என்பது தான் எனது விருப்பம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் செய்திகள்