முக்கிய செய்திகள்:
டெல்லி செங்கோட்டை வடிவில் தி.மு.க. மாநாடு

திருச்சி பிராட்டியூர் அண்ணா நகரில் தி.மு.க. 10–வது மாநில மாநாடு பிப்ரவரி 15, 16–ந்தேதிகளில் நடக்கிறது.இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. மாநில மாநாட்டுக்காக பிராட்டியூர் ரெட்டைமலை அருகே 10 லட்சம் பேர் அமரும் வகையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநாடு வரவேற்புக்குழு தலைவருமான கே.என்.நேரு, மாநாட்டு திடலில் தங்கியிருந்து இரவு, பகலாக மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த 6–ந்தேதி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார். மேலும், மாநாட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது 50 சதவீத பணிகள் நிறைவுபெற்று உள்ளன.

மாநாட்டு நுழைவு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்படுகிறது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல் 1100 அடி நீளத்திலும், 600 அடி அகலத்திலும், மாநாட்டு மேடை 200 அடி நீளத்திலும், 80 அடி அகலத்திலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு கொடி மேடை மறைந்த கே.என்.ராமஜெயம் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. கொடி மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயரத்தில் ஒரே கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலின் முகப்பு தோற்றம் பாராளுமன்ற வடிவில் உருவாகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கும் வகையில், மாநாட்டு மேடையின் அருகே ஓய்வு அறையும் உருவாக்கப்படுகிறது.மேலும் தி.மு.க. மாநாட்டு முகப்பு பந்தல் அமைக்கும் பணிகளை சினிமா ஆர்ட் கலைஞர்கள் முகாமிட்டு கவனித்து வருகிறார்கள்.

 

மேலும் செய்திகள்