முக்கிய செய்திகள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில்களுக்கு மானியம்:முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,1956–ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 திருக்கோயில்கள், ஒரு மகளிர் கல்லூரி, இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு ஆரம்பப்பள்ளி ஆகியவற்றை நிர்வகிக்க கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த திருக்கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே ஒரளவு வருமானம் வரப்பெருகிறது. இந்த 490 திருக்கோயில்களின் நிர்வாகம், அன்றாடம் நடைபெறும் தினசரி பூஜைகள், திருவிழா செலவுகள், பராமரிப்பு, திருப்பணி செலவுகள், பணியாளர் சம்பளம் ஆகியவை ஒரு சில கோயில்களிலிருந்து வரும் வருமானம் மற்றும் அரசால் இத்திருக் கோயில்களின் நிர்வாகத்திற்கென வழங்கப்படும் 1 கோடி ரூபாய் மானியம் ஆகியவற்றைக் கொண்டு நடைபெறுகின்றன. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செலவினங்களால், இத்திருக்கோயில்களை நிர்வகிப்பதில் நிதி இடர்பாடுகள் ஏற்படுகின்றன.இதனைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்கள், ஒரு பெண்கள் கல்லூரி, ஒரு மேல்நிலைப் பள்ளி, இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிதி இடர்பாடுகளை களைந்து செம்மையான நிர்வாகத்தை மேற்கொள்ள தற்போது இத்திருக்கோயில்களுக்கென அரசால் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் மானியத் தொகையான 1 கோடி ரூபாய் தொகையை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்த ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியமாக 750 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பூசாரிகளின் வயதினையும், தற்பொழுது நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத் தொகையை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்