முக்கிய செய்திகள்:
தி.மு.க. ஆட்சியின் போது தமிழ்நாட்டில் ரூ.62,340 கோடிக்கு முதலீடு:2.35 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது,

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று தலைவர் கலைஞர் கூறி எல்லா யூகங்களுக்கும் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்து விட்டார். சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று எங்கள் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எங்களது இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் இல்லாத புதிய அணியை நாங்கள் உருவாக்குவோம்.பா.ஜ.க. மதச்சார்புடைய கட்சி. காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டது.

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா எந்த வடிவத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்று கலைஞர் கூறினார். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கலைஞர் எதிர்த்தார்.ஆனால் மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டது. வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித்தை இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தது. மேற்கத்திய நாடுகள் எல்லாம் இலங்கையை கடுமையாக கண்டித்தன. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவறியதோடு, பாக்ஜல சந்தியில் மீன் பிடிக்கும் நமது மீனவர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தவறி விட்டது.

குலாம்நபி ஆசாத் சமீபத்தில் தலைவரை சந்தித்ததை தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணியா என்ற பேச்சு எழுந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குலாம்நபி ஆசாத்தே கூறியுள்ளார்.எந்த கட்சிக்காரர்கள் வந்தாலும், அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க கலைஞர் தவறியதே இல்லை. எனவே குலாம்நபி ஆசாத் வந்து சந்தித்ததில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகி விட்டது. எங்கள் கூட்டணியில் வந்து சேருமாறு தே.மு.தி.க.வுக்கு கலைஞர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.தே.மு.தி.க., எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமணத்துக்கு அழைக்கவே விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். நாங்கள் அவரை விஜயகாந்துடன் சந்திக்க சொல்லவில்லை.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பா.ஜ.க. கூட்டணியோ தனிப்பெரும்பான்மை பலம் பெற வாய்ப்பு இல்லை. தேர்தலில் வலுவான 3–வது அணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு கணக்கு அடிப்படையில் பார்த்தால் எங்கள் கூட்டணிக்கே சாதகமான சூழ்நிலைகள் உள்ளது. அடுத்தப் பிரதமரை தேர்வு செய்வதில் கலைஞர் முக்கியப் பங்கு வகிப்பார்.பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் தி.மு.க.வின் நல்லாட்சி பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்வோம். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நிதி உதவி பெற்று பல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.

தற்போது தவறான நிர்வாகம் காரணமாக மின் பற்றாக்குறை நீடிக்கிறது. கிராமப்பகுதிகளில் 12 மணி நேரம் வரை கூட மின்தடை ஏற்படுகிறது. எங்கள் ஆட்சிக் காலத்தில் 2 மணி நேர மின் வெட்டே அமலில் இருந்தது.தி.மு.க. ஆட்சியின் போது 51 நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில் ரூ.62,340 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டது. 2.35 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

டெல், மோட்டரோலா, அப்பல்லோ டயர்ஸ், நிசான், சாம்சங், நோக்கியா, சீமென்ஸ் போன்ற தொழிற்சாலைகள் கடந்த கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா தன் ஆட்சியில் கொண்டு வந்த தொழில் திட்டங்களை சொல்ல வேண்டும். உண்மையில் மாநில அரசு நிர்வாகத்தில் ஊழல் நடக்கிறது. நாங்கள் தொடங்கிய மின் திட்டங்களைத்தான் இப்போது அமல்படுத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மாநகராட்சிகளில் சேரும் கழிவுகளில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாக கூறி இருந்தனர். அந்த திட்டம் என்ன ஆனது? மின் பற்றாக்குறைக்கு இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மத்திய அரசையும், கலைஞரையும் குறை சொல்ல முடியும்?தேசிய அரசியலில் இப்போது மோடி பற்றி நிறைய எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு கிடைத்துள்ள புகழ் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மோடியா, ராகுலா என்ற பேச்சு எழுந்துள்ளது. நரேந்திர மோடிக்கு முதல்வராக பணியாற்றிய வாய்ப்பு கிடைத்தது. ராகுல் காந்திக்கு அத்தகைய வாய்ப்பும் அனுபவமும் கிடைக்க வில்லை.பிரதமராக அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை பலம் இல்லை.தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட சில நாட்களுக்குள் கோஷ்டி சண்டையால் பிளவு பட்டு விட்டதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.

தமிழக அரசியலை பொறுத்தவரை நான் திடீரென வளர்ச்சி பெற்று விடவில்லை. நான் அரசியலுக்கு வந்து, இந்த ஆண்டுடன் 47 ஆண்டுகள் ஆகிறது.எனக்கு 13 வயது இருக்கும் போதே கோபாலபுரத்தை சுற்றியுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து 1966–ம் ஆண்டு தி.மு.க. இளைஞர் பிரிவை தொடங்கினேன். அதன் மூலம் பொதுக் கூட்டங்கள் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழாக்களை நடத்தினேன்.

தேர்தல் பிரசார நாட்களில் இளைஞர் அணி மூலம் தெருக்களில் நாடகங்கள் நடத்தி ஆதரவு திரட்டினோம். 1971–ம் ஆண்டு சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தெருவில் நாங்கள் நடத்திய நாடகத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நாற்காலியில் அமர்ந்து பார்த்தால் பின்னால் இருப்பவர்களுக்கு மறைக்கும் என்பதால் அவர் ரோட்டில் தரையில் உட்கார்ந்து எங்களது நாடகத்தை பார்த்தார்.

தி.மு.க.வில் நான் கஷ்டப்பட்டுத்தான் முன்னேறினேன். முதலில் வார்டு கிளைக் கழக உறுப்பினராக இருந்தேன். பிறகு அதன் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவனாக இருந்தேன்.1980–ம் ஆண்டு தி.மு.க. இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. அப்போது அதன் அமைப்பாளர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டேன். மிசா எமர் ஜென்சியின் போது கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டேன்.

எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை நான் கடமை உணர்வுடன் செய்து மேலிடத்தின் எதிர்பார்ப்பு களை பூர்த்தி செய்தேன்.

எனது மகன் உதயநிதி திரை உலகில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சில படங்களை தயாரித்து வருகிறார். அவரது கவனம் முழுக்க சினிமாவில் உள்ளது.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர் படங்கள் தயாரிப்பது அதிகரித்துள்ளது. அவர் தயாரிக்கும் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்க மறுக்கிறார்கள்.கோர்ட்டை அணுகி அவர் நிவாரணம் பெற்றுள்ளார். இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வர எந்த திட்டமும் இல்லை.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்