முக்கிய செய்திகள்:
பரமக்குடி அரசு கல்லூரிக்கு நிதியுதவி:ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, குறிப்பாக கிராமப்புற மாணவ, மாணவியர் தொடர்ந்து உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ஆண்டுதோறும் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை தொடங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீட்டாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையோர் பல்கலைக் கழக அளவில் தர வரிசைப் பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர்.இந்தக் கல்லூரி தமிழக அளவில் 10 ஆம் இடத்தைப் பெற்று சாதனை பெற்றுள்ளது.இந்தக் கல்லூரியில் 2012–13 கல்வியாண்டில் புதியதாக 8 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. புதியதாக தொடங்கப்பட்டுள்ள 8 பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் நலன் கருதி, கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், துறைத் தலைவர்கள் அறை, பொது நூலகம், மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள், அலுவலகப் பணியாளர்கள் அறை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இப்பணிகளை விரைந்து நிறைவேற்ற 4 கோடியே 67 லட்சத்து 61 ஆயிரத்து 750 ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு அளித்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்