முக்கிய செய்திகள்:
தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயராலும் வழங்கப்படும் விருதுகளை:26–ந்தேதி ஜெயலலிதா வழங்குகிறார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது கவிஞர் யூசிக்கும், தந்தை பெரியார் விருது சுலோச்சனா சம்பத்துக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது பேராயர் முனைவர் எம்.பிரகாசுக்கும், பேரறிஞர் அண்ணா விருது பண்ருட்டி இராமச்சந்திரனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது அய்யாறு வாண்டையாருக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஞான சம்பந்தனுக்கும்,

பாவேந்தர் பாரதிதாசன் விருது முனைவர் இராதா செல்லப்பனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது ஜெ.அசோக மித்திரனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் முனைவர் ஜெயதேவனுக்கும் 15.1.2014 அன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும். திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு பின்னர், விருதுகள் பெறுபவர்கள் முதல்–அமைச்சரின் திருக்கரங்களால் விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.விருது பெறுபவர்களின் விருப்பத்திற்கிணங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவற்றை 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் தன்னுடைய திருக்கரங்களால் வழங்குவார்.விருதுகளை பெறுவோர் தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் திருக்கரங்களால் பெற்றுக் கொள்வார்கள்.

திருவள்ளுவர் விருதைப் பொறுத்தவரையில், திருவள்ளுவர் விருதை பெறும் கவிஞர் யூசி தைவான் நாட்டிலிருந்து விருதைப் பெறுவதற்காக வருகிறார் என்பதாலும், திருவள்ளுவர் விருதினை திருவள்ளுவர் தினத்தன்று வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும், 15.1.2014 அன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படும். இவ்விருதினை பெறுவோரை சிறப்பிக்கும் வகையில், 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சரால் வழங்கப்படும்.

மேலும் இதே விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்