முக்கிய செய்திகள்:
காசிமேடு மற்றும் ராயபுரம் மீன்பிடித் துறைமுகத்தினை மேம்படுத்த ரூபாய் 75 கோடி :ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்பட்டு வரும் தொகையை இரட்டிப்பாக்கியது, மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் சிறப்பு நிவாரண உதவித் தொகையாக 4,000 ரூபாய் வழங்கும் முன்னோடித் திட்டம், மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டம், விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்தல், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விற்பனைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்,

கடலோர மாவட்டங்களில் மீன் பதனிடும் பூங்காக்களை அமைத்தல், செயற்கை மீன் உறைவிடங்கள் நிறுவுதல், கடல் மீனவர்களுக்கு தடையற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை மீனவர்களின் நலனுக்காவும், மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.மீன்பிடி படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்திடவும் மற்றும் மீன் பிடி உபகரணங்களை நல்ல முறையில் பராமரிக்கவும் போதிய இடவசதியின்மையின் காரணமாக மீனவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித் தளங்களை மீனவர்களின் நலனுக்காக தமிழக கடற்பகுதிகளில் அமைத்து வருகிறது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் என்றும் ராயபுரம் மீன்பிடித் துறைமுகம் என்றும் அழைக்கப்பெறும் சென்னை மீன்பிடித் துறைமுகம் 1984 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைமுகத்தில் 575 மீன்பிடி படகுகள் வரை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. தற்பொழுது இந்த மீன்பிடி துறைமுகத்தில் வருகைத் தரும் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 1,395 ஆக உயர்ந்துள்ளது மட்டுமன்றி கையாளப்படும் மீன்களின் அளவும் அதிகரித்துள்ளது.

எனவே அதிக எண்ணிக்கையுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் அதிப்படியான மீன்வரத்தினை கையாளுவதற்கு ஏதுவாக, இந்தத் துறைமுகத்தினை 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இத்திட்டத்தின்படி, வடக்கு அலை தடுப்பு சுவரில் 300 மீட்டர் நீளத்தில் புதிய படகு அணையும் துறை, கண்ணாடி நாரிழை படகுகள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் 200 மீட்டர் நீளத்திற்கு புதிய படகுத்துறை, தற்பொழுதுள்ள படகுத்துறையின் வடக்கு முனையில் 140 மீட்டர் நீளத்திற்கு நீட்டிப்பு செய்தல், 150 மீட்டர் நீளத்திற்கு இரண்டு புதிய துணை படகு துறைகள்,

200 மீட்டர் நீளத்திற்கு இரண்டு புதிய துணை படகு துறைகள், இரண்டு புதிய வலை பழுது பார்க்கும் கூடங்கள் ஏற்படுத்துதல், சுகாதார வளாகம், மின்வசதி, சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் துறைமுகத்தினை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 12,000 மீனவர்கள் நேரடியாகவும், 15,000 மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பயன் பெறுவர்.சென்னை மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையிலும், தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியாகவே விளங்கும் மீன்வளத் துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு உடைய சென்னை நகரின் மையத்தில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியை மக்கள் பயன் பெறும் வண்ணம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பசுமைப் பூங்காவாக புனரமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.

இந்த ஏரியில் பொழுது போக்கு அம்சங்களான தூண்டில் மீன்பிடிப்பு, நீர் சாகச விளையாட்டுகள், படகு சவாரி, திறந்தவெளி அரங்கங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு திடல் போன்ற வசதிகள் அமைக்கப்படும். இந்த பூங்கா பசுமையுடன் விளங் கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் அழகிய மற்றும் அரிய வகை மரங்கள் வைக்கப்படும்.

இந்த பசுமைப் பூங்காவில் உருவாக்கப்படவிருக்கும் நடைபாதை மற்றும் தொடர் நடைபாதைகள் மக்களுடைய உடல்நலத்தையும், மனநலத்தையும் பேண உதவிகரமாக இருக்கும். இந்த பூங்காவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இந்தப் பூங்காவிற்கு அதிக அளவில் மக்கள் வாகனங்களில் வருவதற்கு வழிவகை ஏற்படும். இங்கு வருகைத் தரும் மக்களின் பயன்பாட்டிற்காக மீன் உணவகம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்.இப்பணிகளை நிறைவேற்றுவதற்காக 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் சேத்துப்பட்டு ஏரி வருங்காலத்தில் ஒரு சிறந்த சுற்றுலா மையமாக வளர்வதற்கு வழிவகை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்