முக்கிய செய்திகள்:
தமிழக காவல் துறையினர்களுக்கு பொங்கல் பதக்கம்: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்–அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு “தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதல்–அமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு ரூ. 200 மாதாந்நிர பதக்கப்படியாக வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல் துறை தலைவர், இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள், 2 காவல் புகைப்படக் கலைஞர் மற்றும் நாய் படைப்பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக ‘முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்க தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூபாய் 3 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூபாய் 4 ஆயிரமும் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் நிலையில் ரூபாய் 6 ஆயிரமும் வழங்கப்படும்.இதற்கென நடைபெறவுள்ள சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்–அமைச்சர் அவர்களால் பதக்கங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்