முக்கிய செய்திகள்:
கூட்டணி பற்றி கருணாநிதி முடிவு செய்வார்: திருமாவளவன் பேட்டி

சென்னையில் இன்று திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். மார்ச் 7 முதல் 28 வரை ஜெனீவாவில் மனித உரிமை ஆணைய கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கையின் போர் அத்துமீறல் குறித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து வலியுறுத்த உள்ளது.

இதேபோல் இந்திய அரசும் தீர்மானத்தை முன்மொழிய டெசோ சார்பில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசினேன். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று கூறிய இலங்கை மந்திரி ரஜிதா சேனரத்னேவின் பேச்சு இந்திய அரசுக்கு விடுக்கும் சவாலாகும்.

இந்த கருத்தால் தமிழக மீனவர்களிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும்.

கே:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினீர்களே, அதுபற்றி விவாதித்தீர்களா?

ப:– மதவாத சக்திகள் வென்றுவிட கூடாது என்பதற்காக பா.ஜனதா கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். அவர் தனது நிலைப்பாட்டை பிப்ரவரி 2–ந்தேதி நடைபெறும் மாநாட்டில் கருத்து கேட்டு முடிவு எடுப்பதாக கூறினார்.

கே:– தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சேரும் சூழ்நிலை உருவாகிறதே?

ப:– தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்பதை கலைஞர் முடிவு செய்வார்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

 

மேலும் செய்திகள்