முக்கிய செய்திகள்:
ராயப்பேட்டையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கருணாநிதி பங்கேற்பு

தென் சென்னை மாவட்ட செயலளார் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தென்சென்னை மாவட்ட தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் சார்பில் பொங்கல் விழா, 2014 ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது.வருகிற 14–ந்தேதி செவ் வாய்க்கிழமை, மாலை 5 மணியளவில், சென்னை -ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

விழாவிற்கு, தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். தி.மு.க. கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவர் கனிமொழி, எம்.பி., அவர்களின் முயற்சியால், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களாக, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த பொங்கல் விழா - தமிழர் திருவிழா நிகழ்ச்சி விவரம் வருமாறு,

14–ந்தேதி மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் ராஜ்குமார் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியுடன் விழா துவங்குகிறது. காரியப்பட்டி இராமர் - குரு குழுவினரின் தப்பாட்டம், தஞ்சாவூர் யோகராணி குழுவினரின் கரகாட்டம், சென்னை வில்லி வாக்கம் அமீது குழுவினரின் சிலம்பாட்டம், ஈரோடு பம்பை கைச்சிலம்பம், சின்ன குமார் குழு வழங்கும் இன்னிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை 5.30 மணி அளவில், தஞ்சாவூர் நாகு குழுவினரின் நாதஸ்வரத்துடன் துவங்கும் விழா, திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம், கோயில்பட்டி குமரராமன் குழுவினரின் தேவராட்டம், அரக்கோணம் தமிடிந வழங்கும் தப்பாட்டம், அந்தோணிதாசன் குழு வினரின் இன்னிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மாலை 5.30 மணியளவில், பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம், அலங்காநல்லூர் வேலு குழுவினரின் தப்பாட்டம், பட்டுக்கோட்டை லிம்போ கேசவன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, நாகு குழுவினரான லட்சுமி,- இளையராஜா ஆகியோரின் நையாண்டி, வேடந்தாங்கல் மணிமாறன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பால் ஜேக்கப் ஆர்கெஸ்ட்ரா இன்னிசை குழுவினரின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் தமிழரின் விளையாட்டு நிகழ்ச்சிகளான உரியடி விளையாட்டு, பரமபதம், தோல்பாவைக் கூத்து, கொக்கிலி கட்டை ஆகியவை நடைபெற உள்ளது.

மேற்சொன்ன திடலில் மூன்று நாட்களும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. விருதுநகர் விஜயன் வழங்கும் கொத்து பரோட்டா, வீச்சு பரோட்டா, பலவகை பிரியாணி, முட்டை தோசை, கறி தோசை, காளான் தோசை, மதுரை மெஜிரா சிக்கன், சிக்கன் செட்டுநாடு சாப்ஸ், சிக்கன் செட்டிநாடு குழம்பு, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் தோசை, மட்டன் குழம்பு, காளான் சுக்கா ஆகிய உணவுகளும் மற்றும் பலவகை சைவ உணவுகளும், திருவில்லிப்புத்தூர் பால் கோவா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மதுரை பேமஸ் ஜிகிர்தண்டா, மதுரை பிரேம விலாஸ் அல்வா போன்ற இனிப்பு வகைகளும் நிகழ்ச்சிகளில் விற்பனைக்கு கிடைக்கும். திடலில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது.

தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - பகுதிக் நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்டக் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிரா விடர் நலக்குழு, கலை-இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை ஆகிய அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள் -துணை அமைப்பாளர்கள் - நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்கும் தமிழர் திருநாளான இப்பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்