முக்கிய செய்திகள்:
பொங்கல் பரிசாக ஊக்கத் தொகை: ஜெயலலிதா உத்தரவு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனியார் நிறுவனங்கள் என்றாலும், அரசு நிறுவனங்கள் என்றாலும், அரசுத் துறை என்றாலும், ஊக்கம் என்ற உந்து சக்தியே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேம்பாட்டிற்கு ஆதாரமாகவும், தொழிலாளர்களின் செயலாக்கத்தை முடுக்கி விடக் கூடியதாகவும் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ஊக்கம் அதிகமாக இருந்தால் இலக்கை அடைவதில் அதிக ஆர்வமும், அதற்கான செயலை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டு அச்செயல் எளிமையானதாக முடிவதுடன், சிறப்பாகவும் அமைந்திடும்.

பணியாளர்களுக்கு ஊக்கம் இன்றியமையாதது என்பதால் தான் மக்களுக்கு சேவை அளிக்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ், பொங்கல் பரிசு, ஊக்கத் தொகை, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியப் பயன்கள் என பல்வேறு சலுகைகளை நான் வழங்கி வருகிறேன்.

இதன் காரணமாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. இதே போன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் சேவைகளும் சிறப்புற அமைந்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு சிறப்புற பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊக்கத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2013 ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 332 பணியாளர்களுக்கு 7 கோடியே 42 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இதே போன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் செயலாக்க ஊக்கத் தொகையாக 1,000 ரூபாயும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெற்ற ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயலாக்க ஊக்கத் தொகையாக 350 ரூபாயும் வழங்கப்படும். அதாவது, 38,899 பணியாளர்களுக்கு 1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 260 ரூபாய் செயலாக்க ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களில், 2013 ஆம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு 145 ரூபாய் வீதமும்;

91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 240 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 400 ரூபாய் வீதமும்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை” வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சுமார் 25,613 பணியாளர்களுக்கு 2 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

மொத்தத்தில், இந்த அறிவிப்பின் மூலம் 1,95,844 பணியாளர்களுக்கு 11 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரத்து 260 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த தொழிலாளர் ஊக்குவிப்பு நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களும், பணியாளர்களும் மேலும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும், செயல்பட வழிவகுக்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்