முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பழுதடைந்துள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதுப்பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இக்குடியிருப்புகளில் சீர் செய்தல் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டிற்கு (2013–14) 10 கோடி ரூபாயும் அடுத்த ஆண்டிற்கு (2014–15) 15 கோடியே 77 லட்சம் ரூபாயும் என மொத்தம் 25 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 177 திட்டப் பகுதிகளில் உள்ள 29,028 குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் சரிபார்க்கும் பணிகள் நிறைவேற்றப்படும்.

குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை நகரில் ஆட்சேபகரமான பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை, மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்வு திட்டம் வாயிலாக மாற்றிடத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யும் பொருட்டு, ஒக்கியம் துரைப் பாக்கம் கண்ணகி நகர் திட்டப்பகுதியில் இதுவரை 15,656 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இதே திட்டப்பகுதியில் 8,048 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

தற்பொழுது இப்பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இங்கு வாழும் மக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் வாழும் மக்களின் நலனுக்காக அதிக அளவு அரசு போக்குவரத்து பேருந்துகளை இயக்குவதற்காக, தற்பொழுது கண்ணகி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்தி 20 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்ப தளங்கள், பயணிகளுக்கான இடவசதி, நிர்வாகக் கட்டடம், நேரக்காப்பாளர் அலுவலகம், பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிமனையுடன் கூடிய பேருந்து முனையத்தை கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை மறு குடியமர்வு செய்ய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி வார்டு எண்.96 கக்கன்ஜி நகரிலுள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மாற்று குடியமர்வு திட்டமாக 84 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக 1,056 அடுக்குமாடிக் குடியிருப்புகள், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்தில் 32 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 416 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 117 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் மாநில அரசின் மானியமாக அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்திற்கு 31 கோடியே 5 லட்சம் ரூபாயும், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்திற்கு 11 கோடியே 63 லட்சம் என 42 கோடியே 68 லட்சம் வழங்குவதற்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 271 சதுரஅடி தரைப்பரப்பளவு கொண்டதாகவும், இரு அறைகள், சமையலறை, பால்கனி மற்றும் கழிவறையுடனும் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்