முக்கிய செய்திகள்:
மணல் விற்க அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மணல் இரண்டாம் நிலை விற்பனை கிடங்குகளை தனியார் மூலம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மணல் விற்பனையில் ஏற்கனவே பல முறைகேடுகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த முடிவு மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

2003–ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட குவாரிகளில் அரசே பொதுப்பணித் துறை மூலம் நேரடியாக மணலை வெட்டி எடுத்து விற்பனை செய்யாமல், குவாரி நிர்வாகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது.இதனால் விவசாயம், சுற்றுச்சூழல் இரண்டுமே பாதிக்கப்பட்டன. அதன் பின் 2006–ம் ஆண்டில் பதவியேற்ற தி.மு.க. அரசும் இதே கொள்கையை கடைப்பிடித்தது.

இப்போது அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையங்களை அமைக்க அரசு தீர்மானித்திருக்கிறது. இதனால், மணல் விலை குறையும் என்ற தமிழக அரசின் வாதம் தவறானதாகும். ஏற்கனவே, மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இரண்டாம் நிலை விற்பனை என்ற பெயரில் ஆற்று மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றன.அரசிடமிருந்து ஒரு லோடு மணலை ரூ.1000 என்ற விலையில் வாங்கும் அந்த நிறுவனங்கள் அதே இடத்தில் அந்த மணலை ஒரு லோடு ரூ.6000 முதல் ரூ.9000 வரை விற்பனை செய்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு நாளைக்கு ஆயிரம் லோடு விற்பனை செய்யப்பட்டால், வெறும் 100 லோடு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக கணக்கில் காட்டி வருகின்றனர். இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.24,000 கோடி வீதம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2.40 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மணல் இரண்டாம் நிலை விற்பனை நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், ஆறுகளிலிருந்து மணல் அளவின்றி கொள்ளையடிக்கப்படும். மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் தனியாருக்கு சென்றுவிடும்.எனவே, தனியார் மூலம், மணல் இரண்டாம் நிலை விற்பனை நிலையங்களை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே, தனியார் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு ஆணையிட வேண்டும். அனைத்து குவாரிகளிலும் தமிழக அரசே நேரடியாக பணியாளர்களை அமர்த்தி, குறைந்த விலையில் ஆற்று மணலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்