முக்கிய செய்திகள்:
இடஒதுக்கீடு இல்லாமல் டாக்டர்களை நியமிக்க கூடாது: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இயக்குனர், பதிவாளர்கள் உட்பட 84 பணியிடங்களுக்கான நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஒரேயொரு பணியிடத்தை நிரப்புவதாக இருந்தாலும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும்போது அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி மட்டுமின்றி அச்சமும் அளிக்கிறது.சமூகநீதியின் பிறப்பிடம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என அறிவிக்கும் ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எதிலுமே இட ஒதுக்கீடு இல்லை என அறிவிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்பதுதான் அச்சத்திற்கு காரணமாகும்.

அதுமட்டுமின்றி, தலைமைச்செயலக அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட 3 மடங்கு வரை அதிக ஊதியம் வழங்கப்படும்; இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் பணியில் சேரலாம்.

தமிழக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாவிட்டால் கூட, வேலையில் சேர்ந்த பிறகு பதிவு செய்து கொள்ளலாம் என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவதால்தான் இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் வழங்கப்படுவதாக அரசுத் தரப்பில் காரணம் கூறப்படலாம். ஆனால், அது ஏற்கக்கூடிய காரணமல்ல. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.அரசு மருத்துவமனைகளில் இப்போது பணியாற்றும் மருத்துவர்களை விட, புதிதாக நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டால், அது ஏற்கனவே பணியாற்றும் மருத்துவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் மேலாக, வழக்கமான மருத்துவர்கள் தேர்வு முறையை விடுத்து, 10 நாட்களுக்குள் அவசர, அவசரமாக மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசரத்தேவை எதுவும் இப்போது ஏற்படவில்லை.

எனவே, இட ஒதுக்கீடின்றி, மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்று, வழக்கமான நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிடில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். *இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்