முக்கிய செய்திகள்:
மதுவை விற்று மக்களை குடிகாரர்களாக்கும் தமிழக அரசு:பா.ம.க.பொதுக்குழு உறுதிமொழி

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்பு, மணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடிவேல்ராவணன் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் புத்தாண்டு தினத்தையொட்டி மது அல்லாத தமிழ்நாடு, குடும்ப அமைப்பை போற்றி பாதுகாப்பது, புகை– புகையிலை பழக்கத்தை ஒழிப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட 14 உறுதிமொழிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று ஏற்றனர். இதை ஜெயபாஸ்கர் வாசித்தார்.

இதையடுத்து மாநில தலைவர் ஜி.கே.மணி பேசினார். அப்போது, ‘‘பா.ம.க. சார்பில் சமூக ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான புதிய கூட்டணி. இதன் சார்பில் ஏற்கனவே 2 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசியவர்கள் வேட்பாளர்களின் வெற்றி குறித்த கருத்துக்களை மட்டும் பேச வேண்டும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பிரதிநிதிகள் பேசினார்கள். இதில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அமைக்கும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். பின்னர் கூட்டணி குறித்து நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அறிந்தார். பா.ம.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதன் விவரம் வருமாறு:–

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கையை துணிச்சலுடன் எதிர்கொண்டு கொடுஞ்சிறையை அனுபவித்து திரும்பிய ஜெ.குரு உள்ளிட்ட 134 பேரையும் பொதுக்குழு பாராட்டுகிறது.

ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசு மீது இதுவரை எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை. இனப்படு கொலைக்காக ராஜபக் சேவையும், அவரது கூட்டாளிகளையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதும், தமிழர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய ஐ.நா. மூலம் தனித்தமிழீழம் அமைப்பதும் தான் ஈழத் தமிழர்களுக்கு நாம் வழங்கும் நீதியாக இருக்கும்.

இதை செய்யத் தவறிய மத்திய அரசுக்கும், அவ்வாறு செய்யும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் தவறிய முந்தைய தி.மு.க. அரசு மற்றும் இப்போதைய அ.தி.மு.க. அரசுக்கும் பா.ம.க. கட்சியின் தலைமை பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை எதிர்க்கட்சியினரை பழி வாங்குதல், 144 தடை உத்தரவை பிறப்பித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மின்வெட்டை சரிசெய்யாத தமிழக அரசை பா.ம.க. பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.

2016–ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்க உறுதி ஏற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, ஆட்சி அமைத்த பின்னர் அனைவருக்கும் தரமான கல்வியை இலவசமாக வழங்கும் என தமிழ்நாடு மக்களுக்கு இந்தப் பொதுக்குழு உத்தரவாதம் அளிக்கிறது.

மக்களின் துயரத்தை உணர்ந்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு பா.ம.க. பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

இந்திய மக்களுக்கான புத்தாண்டு பரிசாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.220 மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதை கண்டிக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இலங்கை சிறையில் வாடும் 267 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 86 படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும்; வரும் 20–ந்தேதி நடைபெற விருக்கும் தமிழக – இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுக்களின் போது இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் மற்றும் கரும்புக்கு போதிய விலை கொடுக்காமல் விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிய தமிழக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

கோமாரி நோயை கட்டுப்படுத்தத் தவறியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிராகரித்தது கண்டிக்கத் தக்கது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியாளர்களின் துயரை துடைக்கத் தவறிய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அதன் கடைமையை செய்யத் தவறியதற்காக கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

தமிழக அரசு, மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு பதிலாக ‘எலைட் மதுக்கடைகள்’ என்ற பெயரில் ஆடம்பர மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களை திறந்து வருகிறது. மதுவை விற்று மக்களை குடிகாரர்களாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு உச்சபட்ச கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

தென் மாவட்டங்களில் சட்டத்திற்கு எதிரான வகையில் தாது மணல் அள்ளப்பட்டதில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.96,000 கோடிக்கும், கிரானைட் வெட்டி எடுப்பதில் சுமார் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது.

21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்துக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டமாக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் தவறான பயன் பாட்டை தடுக்க சில திருத்தங்களை செய்ய வேண்டும். அதோடு அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு இப்பொதுக்குழு இரங்கல் தெரிவிக்கிறது.

பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., இரா.வேலு, பா.ம.க. பொருளாளர் சையது அக்பர்அலி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், எதிரொலிமணியன், இளைஞர் அணி துணைத் தலைவர் மாம்பலம் வினோத் நாடார், செயலாளர் பாபு செல்வராஜ்.

மாநில துணைதலைவர் கே.என்.சேகர், ஈகை தயாளன், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் ராம கன்னியப்பன், கோயம்பேடு வி.ஜே.பாண்டியன், வெங்கடேசன், ஏழுமலை, சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, வண்னை சத்தியா, ஸ்ரீமான் இளங் கோவன், டெல்லிபாபு, சகாதேவன், சைதை சிவக்குமார், சூரியா, சங்கர், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்