முக்கிய செய்திகள்:
மத்திய அரசு மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது;வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மீண்டும் மீண்டும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை ஒரே அடியாக ரூபாய் 220 உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று, உலக வங்கி போடுகிற கட்டளையைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது மத்திய அரசு. அதைப் படிப்படியாக நிறைவேற்ற, கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு, ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தது. பின்னார், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக 9 உருளைகள் வழங்கப்படும் என்று மாற்றியது.

இருந்தாலும், சமையல் எரிவாயு உருளை வழங்குவதற்கு ஆதார் அடையாள அட்டையை பொதுமக்கள் கண்டிப்பாகப் பெற்று, வங்கிகளில் கணக்குத் தொடங்கி இருந்தால் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் நடைமுறை சாத்தியமற்ற, ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற மோசடியான திட்டத்தின் மூலம், மானியத் தொகையை பொதுமக்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், அதுவரை தேவையான மானியம் இல்லாத உருளைகளை பொதுமக்கள் உரிய தொகையைச் செலுத்தி வாங்கிக்கொள்ள வேண்டும்; பிறகுதான் அரசின் மானியத் தொகை கிடைக்கும் என்பது தந்திரமாக மக்களை ஏமாற்றும் திட்டம் ஆகும்.2013 செப்டம்பர் 23 இல், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால உத்தரவில், “ஆதார் அட்டை இல்லை என்பதால், மக்களுக்கு அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது” என்று தெரிவித்து இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, சமையல் எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை கேட்டு மக்களை அலைக்கழிக்கின்றன.

இந்நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை உயர்த்தி இருப்பது அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும். மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்