முக்கிய செய்திகள்:
அரசு காகித ஆலையில் புதிய திட்டங்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் 164 கோடி ரூபாய் முதலீட்டில் பயன்படுத்திய காகிதங்களிலிருந்து மையினை நீக்கம் செய்து நாள் ஒன்றுக்கு 300 மெட்ரிக் டன் காகித கூழ் தயாரிக்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

இந்த இயந்திரத்தை நிறுவியதன் மூலம், நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் மர காகித கூழ் இறக்குமதி செய்வது தவிர்க்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக, நவீன தொழில் நுட்பத்துடன் மூன்று கட்டங்களாக மையினை நீக்கும் கருவியுடன், நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் காகிதகூழ் தயாரிக்கும் பிரிவினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், ஆலையின் மின் உற்பத்தியை 81.12 மெகாவாட்டிலிருந்து 103.62 மெகாவாட்டாக உயர்த்தி, நிறுவனத்தின் மின்சார தேவையை 100 சதவிகிதம் சுய உற்பத்தியின் மூலம் பெற புதிய கொதிகலனையும், மின் ஆக்கியையும் நிறுவியுள்ளது.இதன் மூலம், நாள் ஒன்றுக்கு 5 மெகாவாட் உபரி மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்படும்.

மேலும், ஆண்டு ஒன்றுக்கு 2500 டன் நிலக்கரி நுகர்வும், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் உபயோகமும் குறையும். காகித ஆலையின் மின்சாரத் தேவையை சுய உற்பத்தி மூலம் பூர்த்தி செய்ய 167 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள புதிய கொதிகலன் மற்றும் மின் ஆக்கி மூலம் மின் உற்பத்திப் பிரிவினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தனது லாபத்தில் சுமார் மூன்று சதவீதத்தை, சமூக நலப் பணிகளுக்காக செலவிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில், காகித ஆலைக்கு அருகில் உள்ள நாணப்பரப்பு, மூர்த்திபாளையம், தன்னாசிகவுண்டன்புதுலீர், துண்டுபெருமாள்பாளையம் ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு காகித ஆலையிலிருந்து 88 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் தனி குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தினை முதல்– அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.மொத்தம், 331 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

கிராமப்புற இளைஞர்கள் சிறந்த தொழிற்பயிற்சியைப் பெற்று அவர்கள் வேலை வாய்ப்பு பெறும் திறனை அதிகரிக்கும் நோக்கில், ஆண்டு தோறும் 100 மாணவ, மாணவிகள் பிட்டர், மின் கருவிகள் பழுது பார்த்தல், வெல்டிங், கருவி கலைவினைஞர் போன்ற துறைகளில் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தால் 4 கோடி ரூபாய் செலவில் காகிதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.பி.எல் தொழிற்பயிற்சி நிலையம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் 2030 சதுர அடி பரப்பளவில் 25 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை அறை மற்றும் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் என மொத்தம், 4 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மொத்தத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கியும், திறந்தும் வைக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 336 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்கு நருமான சி.வி. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்