முக்கிய செய்திகள்:
பச்சரிசி,சர்க்கரையுடன் ரூபாய் 100மும் பொங்கல் பரிசு:ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் திருநாள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், வறட்சி நிலைமை, பயிர்கள் பாதிப்படைந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்; கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இதே போன்று, வரும் 2014ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அரசுக்கு 281 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.என்னுடைய இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்