முக்கிய செய்திகள்:
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வகங்கள் அமைக்க நிதி உதவி:ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையங்களில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி பெறுவோருக்கான பாடத்திட்டத்தில் மொழித்திறன், கணினித்திறன் மற்றும் மென்திறன் பயிற்சி குறித்த பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடங்களை பயிற்றுவிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங் களை ஏற்படுத்திட முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வகங்களுக்காக தேவைப்படும் இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டவும், இந்த ஆய்வகங்களுக்குத் தேவை யான மென் பொருள் மற்றும் கணினி பொறிகள் வழங்கவும், பயிற்சி அளிக்க தேவையான பயிற்றுநர்களை நியமிக்கவும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக, நாகலாபுரம், செக்கானூரணி, ஆண்டிப்பட்டி (மகளிர்), அரக்கோணம், திண்டுக்கல் (மகளிர்), புதுக்கோட்டை, திருப்பூர், மேட்டூர், தர்மபுரி, அரியலூர், திருச்செந்தூர், குன்னூர், விருதுநகர், வேலூர், திண்டுக்கல், தாராபுரம், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், வடசென்னை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கடலூர், கரூர் (மகளிர்), கடலூர் (மகளிர்), வேப்பலோடை, ராதாபுரம், அருப்புக்கோட்டை, திருவையாறு மற்றும் போடி ஆகிய 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்கள் அமைத்திட முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வகங்களை அமைத்திட ஏதுவாக கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் மின் இணைப்பிற்லீக 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இந்த ஆய்வகங்களின் உள்கட்டமைப்பிற்கென 5 கோடியே 72 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய், பயிற்றுநர்களுக்கான ஊதியமாக 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், இணையதளத்திற்கான மாதாந்திர கட்டணமாக 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 7 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வகங்களுக்காக 44 பயிற்றுநர் களை ஒப்பந்த அடிப்படை யில் நியமனம் செய்யவும் ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்