முக்கிய செய்திகள்:
இந்து எஸ்.சி., எஸ்.டி.க்களுக்காக போராடுவோம்:ராம.கோபாலன் அறிக்கை

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் துல்லியமாக கணித்துள்ளார். தன்மானத்தோடு, எதிர்நீச்சல் போட்டு வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

மதமாறினால் அவர்கள் அந்த சலுகையை இழப்பார்கள் என்பது சட்டப்பூர்வமானது. கிறிஸ்தவ மதத்தில் சாதி இல்லை என்றே மதமாற்றப்படுகிறார்கள். அப்படியிருக்கையில் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்க அளிக்கும் சலுகையில் மதமாறியவர்களுக்கு எப்படி பொருந்தும்?

ஒருவர் எந்த மதத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் கடைப்பிடிக்கும் சடாங்காச்சாரங்கள்தான் நிரூபணம். அதுமட்டுமல்ல கிறிஸ்தவ சர்ச்களில் பதிவேடு உள்ளது. அதில் பெயர் பதிவு செய்பவர்கள், சர்ச்சால் ஞானஸ்தானம் செய்யப்பட்டவர்கள். அப்படியிருக்கையில் கண்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு, சர்ச் நிர்வாகத்தின் பதிவேட்டை சரிபார்த்தால் அவர் மத மாறியவரா, இல்லையா என்பது தெரிந்துவிடப்போகிறது.சட்டத்தை ஏமாற்றி சலுகை அனுபவிப்பதை நியாயப்படுத்த முடியாது.

சட்டம் என்ன சொல்கிறதோ அதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பாகவும் இருக்க முடியும். சென்னை உயர்நீதி மன்றம் ஜெயராஜ் என்பவரது மனு மீது தரப்பட்டுள்ள தீர்ப்பு, இட ஒதுக்கீடு சலுகை சட்டத்திற்கு முரணானதாக உள்ளது என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

சர்ச் நிர்வாகத்தின் கீழ் உள்ள எந்த கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படுவதில்லை. ஆனால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசின் நிதியால் இயங்குகின்றன. அப்படியிருக்கையில் மதமாறிய கிறிஸ்தவர்களுக்கு இந்து எஸ்.சி., எஸ்.டி. சலுகையை வழங்கினால், இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களது உரிமை பறிபோகும்.

இந்தத்தீர்ப்பு, தன்மானத்தோடு வாழும் இந்துக்களின் சமூக நீதியை மறுப்பதற்கு சமமாகும். மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு சர்ச் பின்புலம் இருக்கிறது, தன்மானத்தோடு சமூக நீதிக்காக போராடும் இந்து எஸ்.சி., எஸ்.டி., சலுகையிலும் பறிக்கப்பட்டால், அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு தள்ளப்படுவார்கள்.

இந்து முன்னணி இந்து எஸ்.சி., எஸ்.டி.க்களுக்கான வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

 

 

மேலும் செய்திகள்