முக்கிய செய்திகள்:
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன கட்டிடம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள கட்டடம் 40 ஆண்டு கால பழமையான கட்டடம் என்பதால், அதற்கு மாற்றாக 4 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிருவாகக் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்தப் புதிய நிருவாக அலுவலகக் கட்டடத்தில் ஆய்வரங்கம், மொழிபயிற்சிக் கூடம், ஆய்வு நூலகம், நவீன வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைக்கப்படும்.உலகப் பொதுமறையாம் திருக்குறள் மனித வாழ்வின் மாட்சி, ஆளுமைப் பண்பு, மேலாண்மை நுட்பம், அறநெறிக் கருத்து, வாழ்வியல் முறை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

இச்சிறப்புமிக்க பொது மறையில் பொதிந்துள்ள தனிமனித ஒழுக்கம், குடும்ப அமைப்புகள், சமுதாயம், நாடு, உலகம் சார்ந்த சிந்தனைகள் போன்றவற்றை இன்றைய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கண்டு, கேட்டு, உணர்வதற்கு ஏதுவாக சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓவியக் காட்சிக் கூடம் அமைத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.அதன்படி, சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இக்கூடத்தில், திருக்குறளை ஓவியங்களாக விளக்கும் வகையில், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு ஓவியம் வீதம் மொத்தம் 133 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதுடன், திருக்குறள் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், படக்காட்சிகள், சிலைகள், நிழற்படங்கள், திருக்குறள் சார்ந்த 1500க்கும் மேற்பட்ட உரைநடை நூல்கள் ஆகியவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

உலகமெலாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்த் தமிழகத்தின் பண்பாட்டு வேர்களைக் கண்டும், கேட்டும் அறியவும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், தமிழ், தமிழர்கள் குறித்த தகவல்களை ஒருங்கே பெற்றிடவும், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஏற்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.அதன்படி, சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் இராசாராம், பொதுப் பணித்துறைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்