முக்கிய செய்திகள்:
தேர்தலுக்காகவே மோடி ராம ராஜ்ஜியம் பற்றி பேசுகிறார்:காதர்மொய்தீன் குற்றசாட்டு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இன்று(25-12-2013)நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,இஸ்லாமிய மத சம்பந்தமான விஷயங்களில் உலமாக்களின் வழிகாட்டுதலையே முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக வரும் 28–ந்தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை நடத்துகிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாயக சக்திகள் நாட்டை ஆள வேண்டும். அந்த சக்திகள் எவை என்பதை அடையாளம் காட்டுவதோடு இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மதவெறி பாசிசத்தை தூண்டும் சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் இம்மாநாட்டில் வலியுறுத்துவோம்.தேர்தல் வருகிறது என்றதும் உத்தரபிரதேசம் சென்ற மோடி ராம ராஜ்ஜியம் பற்றி பேசுகிறார். முசாபர்நகர் நிவாரண முகாம்களே இன்னமும் மூடப்படாத நிலையில் பதற்றம் நிலவும்போது, மதத்தின் பெயரால் உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு அணிகளே. மற்ற கட்சிகள் அணி அமைத்தாலும் அது சுயேட்சைகளுக்கான அந்தஸ்தாகவே இருக்கும்.2004 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க., ம.தி.மு.க. இடம் பெற்று அமோக வெற்றி பெற்றது. அதுபோல நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் சேர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்