முக்கிய செய்திகள்:
ஆங்கிலப் புத்தாண்டிற்காக நள்ளிரவில் பூஜை செய்வதை தவிர்க்கவும்;ராமகோபாலன் எச்சரிக்கை

இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், டிசம்பர் 31 நள்ளிரவு (ஆங்கிலப் புத்தாண்டு) கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அநாகரிக காட்சிகள் அரங்கேறுவதுடன், கொலை, கற்பழிப்பு, விபத்து, ஈவ் டீசிங் போன்றவற்றால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இதனைத் தடுக்க காவல்துறை ஆணையர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்து முன்னணி சார்பில் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்.

இரவு பூராவும் குடித்து கும்மாளமிட்டு விட்டு, போதையிலேயே இரவில் பைக், கார் ரேஸ் போவோரைக் கைது செய்வதுடன், வண்டிகள் பறிமுதல் செய்ய வேண்டும்.நள்ளிரவில் பெண்களிடம் ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்வதாக கைகளைப் பிடித்து தகாத முறையில் நடந்து கொள்வோர் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஆகிய இரண்டு நாட்கள் நீங்கலாக நள்ளிரவில் ஆலய பூஜைகள் நடைபெறுவது கூடாது. ஆகம விதிகளுக்கும், இந்த சமய நம்பிக்கைகளுக்கும் புறம்பாக வியாபார நோக்கோடு டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களானாலும், தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயங்கள் ஆனாலும் இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும். மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தும்.

சூரிய உதயத்திலிருந்துதான் நாள் ஆரம்பமாகிறது. அப்போது தான் பிராண வாயு அதிகம் கிடைப்பதால் இயற்கையான நாளின் துவக்கம் சூரிய உதயமாகும். அதனாலேயே தாவரங்கள், பறவைகள், விலங்குகள் முதலானவை எல்லாம் விடிந்ததும் தங்களது செயல்களைத் துவக்குகின்றன.இரவு என்பது உயிர் காற்றுச் சக்தியான ஆக்ஸிஜன் குறைவாக உள்ளதாலும், குளிர்ச்சியான சீதோஷ்ணத்தாலும் ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் ஏற்றது. இரவில் ஓய்வெடுப்பதால், நமது உடலும் மனமும் பகலில் உற்சாகமாக வேலை செய்கிறது. இதற்கு நேர்மாறாக மனிதன் செயல்பட்டால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவனது ஆயுள் குறைகிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இந்த சமய நம்பிக்கைகளுக்கு விரோதமாக ஆங்கிலப் புத்தாண்டிற்காக நள்ளிரவில் பூஜை செய்வதை இந்து முன்னணி எதிர்த்துப் போராடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்