முக்கிய செய்திகள்:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,மண்ணில் மனிதநேயம் தழைக்க, "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர் வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று" என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இயேசு நாதரை எண்ணும்போதே, அவரது கோட்பாடுகளைப் பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை எவரும் மறந்திட இயலாது.இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, "தத்துவ போதகர்" எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி!

அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், "தேம்பாவணி"; தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, "சதுரகராதி" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்!

ஜெர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக் கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி "தமிழ் இலத்தீன் அகராதி", "பைபிள்" தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!

இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், "திருக்குறள்", "திருவாசகம்", "நாலடியார்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, "நான் ஒரு தமிழ் மாணவன்" எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!

அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, "திருநெல்வேலி சரித்திரம்" எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்! போன்றோர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய மகத்தான தொண்டுகள் எல்லாம் என் நெஞ்சில் கிளர்ந்து எழுகின்றன.

அதே வேளையில், தம் உன்னதமான தொண்டுகளால் தமிழுக்கு வளம் சேர்த்த இம்மாமேதைகளில் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சிலை எடுத்துச் சிறப்பித்ததையும், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் தங்கிச் சமயப் பணிகள் ஆற்றிய கால்டுவெல் அவர்கள் வாடிநந்த இல்லத்தைப் புதுப்பித்து, 2011 பிப்ரவரி திங்களில் நினைவு இல்லமாகத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியதையும்; கிருத்துவ சமயம், தொண்டு சமயம் என்பதைத் தம் வாழ்க்கை மூலம் புலப்படுத்திய கருணையின் வடிவம் அன்னை தெரசா அவர்களைப் போற்றி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு "அன்னை தெரசா மாளிகை" எனப் பெயர் சூட்டிப் பெருமைப் படுத்தியதையும் நினைவு கூர்ந்து கிறிஸ்துவ சமுதாய உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்