முக்கிய செய்திகள்:
பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியும் பயனில்லை:டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்காகச் செல்லும் தமிழக மீனவர்களை சிறை பிடித்துச் செல்வது தான் சிங்களப் படையினரின் வாடிக்கையாகிவிட்டது. அதிலும், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.கடந்த டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மட்டும் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 140 மீனவர்களை சிங்களப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் தவிர மேலும் 70 மீனவர்கள் ஏற்கனவே இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் வாடும் 210 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களுக்கு சொந்தமான 70 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தன. கடந்த 11 ஆம் தேதி முதல் மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தமிழக முதல்– அமைச்சரோ மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார். இதுவரை 35 முறை பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியும் பயனில்லை.

இலங்கை சிறையில் வாடும் 210 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாகப்பட்டினத்தில் கடந்த சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.அவர்களில் 15–க்கும் மேற்பட்ட பெண்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்துவதுடன், மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடிவரும் போதிலும், இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எவரும் அவர்களைச் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் நாகையை சேர்ந்தவர் தான். அவர் நாகப்பட்டினத்தில் தான் இருக்கிறார் என்ற போதிலும் மீனவர்களை சந்தித்து, குறைகளை கேட்க முயற்சி செய்யவில்லை.நடப்பாண்டில் மட்டும் 600–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பதுடன், அவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்கி விடுவதால் அவர்கள் வாழ் வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

சிங்களப்படை செய்யும் அட்டூழியத்தால் ஒரு சமுதாயமே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதைப்பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழகத்திலிருந்து எழுப்பப்படும் குரல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்