முக்கிய செய்திகள்:
தோழமைக் கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம்;கருணாநிதி பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இறுதியாக நான் உரையாற்றும்போது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க.வுடனும் தி.மு.கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசினேன்.

அந்தப் பேச்சினைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களாகவோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள ஒரு சிலர் வேண்டுமென்றே என்னுடைய அந்தக் கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போலப் பேசி வருகிறார்கள்.

ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைப் பட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயலும் ஆகும்.

எனவே பத்திரிகையாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப்பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: நரேந்திர மோடியை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?

பதில்: தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி நான் எந்தக் கருத்தும் சொல்ல மாட்டேன். நான் பொதுக் குழுவில் கட்சிகளைப் பொறுத்த வரையில் எங்கள் கருத்தினைத் தெரிவித்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க.வுடனும் எங்களுக்குள்ள உடன்பாடுகள், முரண்பாடுகள் இவைகளைப் பற்றியெல்லாம் தெளிவாகப் பேசி பொதுக்குழுவில் ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அந்த முடிவின்படி தான் கழகத்தில் உள்ள பொதுக் குழு உறுப்பினர்கள் ஆனாலும், செயல்வீரர்கள் ஆனாலும் பேச வேண்டும்.

கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?

பதில்: ஏற்கனவே எங்களோடு உள்ள தோழமைக் கட்சிகள் இருக்கின்றன. அவர்களோடு சேர்ந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம்.

கேள்வி: பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்றையதினம் “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையில் வெளிவந்துள்ள உங்கள் பேட்டியில், நீங்கள் மோடியை ஆதரிப்பது போல செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அதற்காகத் தான் தற்போது என்னுடைய விளக்க அறிக்கையைக் கொடுத்தேன். அப்படித் தான் சில பத்திரிகைகள், டெல்லியில் உள்ள பத்திரி கைகள் கூட தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படியாக செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த விளக்கம்.

கேள்வி: அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாகச் செய்தி வந்திருக்கிறதே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உங்களுடைய கருத்துத் தான் என் கருத்து.

கேள்வி: தே.மு.தி.க. உங்கள் கூட்டணியில் வர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: தெரியவில்லை.

கேள்வி: “ஆம் ஆத்மி” கட்சிக்கு டெல்லியில் அதிக இடங்கள் கிடைத்திருப்பதைப் பற்றி? அவர்களது வெற்றியை எப்படி மதிக்கிறீர்கள்?

பதில்: அவர்கள் வெற்றியை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி: அ.தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபாதைகளில் எல்லாம் விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறார்கள். அது பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டும் எதுவும் நடக்கவில்லையே? இனியாவது அவற்றை எடுப்பார்களா?

பதில்: எடுக்க மாட்டார்கள்; மேலும் மேலும் வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

கேள்வி: ஜெயலலிதா நாற்பது இடங்களிலும் அவர்களே போட்டியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நீங்கள் வந்திருப்பது அண்ணா அறிவாலயத்திலே உள்ள கழக அலுவலகம். அந்தக் கேள்வியை நீங்கள் வானகரத்திற்குச் சென்று தான் கேட்க வேண்டும்.

கேள்வி: தமிழ்நாட்டில் மூன்றாவது அணி வர வாய்ப்பிருக்கிறதா?

பதில்: அணிகளைப் பற்றி ஜோஸ்யம் சொல்ல முடியாது.

கேள்வி: மூன்றாவது அணிக்கு நீங்கள் முயற்சி எடுப்பீர்களா?

பதில்: எப்படி நிலைமைகள் உருவாகிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்: தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை எங்களால் முடிந்த உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த காலத்திலும் செய்திருக்கிறோம்,

இப்போதும் செய்து கொண்டு வருகிறோம், இனியும் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்