முக்கிய செய்திகள்:
இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 140 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால், கடந்த 24 மணி நேரத்தில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 140 பேரையும், அவர்களின் 23 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்னை தொடர்பாக, பிரதமர் தாமதமின்றி இலங்கை அதிபருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், டெல்லியில் உள்ள இலங்கை தூதரை வரவழைத்து, அவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த அப்பாவி மீனவர்கள், அவர்களது பாரம்பரிய கடற்பகுதியில் அமைதியான முறையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கடத்தப்படுவது மற்றும் சிறைப்பிடிக்கப்படுவது குறித்து பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இந்தியா, தூதரக அளவில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கேட்டுக்கொண்டதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க மத்திய அரசு தவறியதன் மூலம், மீனவர்களிடையே விரக்தியும், அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதுடன், பதற்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது - இப்பிரச்னையில் இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க தவறியதால், இலங்கை அரசு துணிச்சலுடன் வேண்டுமென்றே ஈவு இரக்கமின்றி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 325 மீனவர்கள், 47 படகுகளில் அக்கரைப்பேட்டைக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை படகுகளுடன் கடத்திசெல்லவும், கைது செய்யவும் இலங்கை கடற்படை முயற்சி செய்துள்ளது - தாம் ஏற்கனவே தெரிவித்து வந்த அச்சம் இதன் மூலம் உண்மையாகிவிட்டது - இந்த நடவடிக்கையானது தமிழக மீனவர்கள் பலரின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்தது - நடுக்கடலில் ஒரு பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது - தமிழக மீனவர்கள் கட்டுப்பாட்டுடன், ஆயுதங்கள் ஏந்திய இலங்கை கடற்படையினருடன் நேரடி மோதலில் ஈடுபடாமல் தவிர்த்திருக்காவிட்டால், பல அப்பாவி மீனவர்கள் உயிரிழந்திருப்பார்கள் - 15 படகுகளில் இருந்த 110 மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் சரணடைந்தனர் - 32 படகுகளில் இருந்த 215 மீனவர்கள் ஊர் திரும்பிவிட்டனர் - இலங்கை கடற்படை மிகவும் விரோதத்துடனும், தண்டிக்கும் நோக்குடனும் நடந்துகொண்டுள்ளது - 110 மீனவர்களும், சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை வட்டாரங்களிடமிருந்து, தமிழக அரசுக்கு விவரங்கள் கிடைத்துள்ள நிலையில், மற்றொரு சம்பவத்தில் இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை 8 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்திருப்பது குறித்து தெரியவந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - தமிழக மீனவர்களை ஒட்டுமொத்தமாக கடத்தி சென்றுள்ள இந்த சம்பவங்கள், இதுவரை நடந்தவற்றில் மிகப்பெரியவை - மிகக்கொடூரமானவை - போர் போன்ற இந்த நடவடிக்கை, இலங்கை அரசின் மறைமுக அங்கீகாரமின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை - இதன் மூலம் இந்தியாவின் மாண்பும், பெருமையும் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது - இந்திய அரசு தங்கள் உயிருக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை அப்பாவி தமிழக மீனவர் சமுதாயம் இழந்துவிட்டது - நமது மீனவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை மீறும் வகையில், அத்துமீறி நடத்தப்படும் இத்தகைய ஆணவச் செயல்களை பார்த்துக்​கொண்டு இனியும் வாளாயிருப்பது இயலாத செயல் என முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உண்மை நிலைமையை இந்திய அரசு இப்போதாவது புரிந்துகொண்டு பிரச்னைக்கு தீர்வு காண திட்டவட்டமான நடவடிக்கை மேற்கொள்ளும் என மனப்பூர்வமாக நம்புவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இப்பிரச்னையில் உடனடியாக தூதரகம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் - டெல்லியில் உள்ள இலங்கை தூதரை, வெளியுறவு அமைச்சகத்துக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, அவரிடம் கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் - பிரதமர் இப்பிரச்னை தொடர்பாக மேலும் தாமதமின்றி இலங்கை அதிபருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் - உடனடி நடவடிக்கை எடுக்கத்தவறினால், தமிழக மீனவர் சமுதாயத்தின் வாழ்வாதாரத்திற்கு பேராபத்து நேரிடும் என்றும், சமூக, பொருளாதார பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரச்னையாக மாறிவிடும் அபாயம் உள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உணர்வு பூர்வமான, கொந்தளிப்பான பிரச்னையில், பிரதமர் உடனடியாக கவனம் செலுத்தி திட்டவட்டமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை தொடர முடியாமல், இலங்கை அரசு தொடர்ந்து இதுபோன்ற அட்டூழியச் செயல்களை நடத்தி வருவதற்கு இந்திய அரசு பதில் நடவடிக்கை எடுக்காமலும், துணிச்சலற்ற அரைகுறையான நடவடிக்கைகளை எடுப்பதும், இப்பிரச்னை மேலும் சிக்கலாகவே வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் சமுதாயத்தினர் இத்தகைய சம்பவங்களினால், கொந்தளிப்பான மனநிலையில் இருக்கின்றனர் - கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படை பிடித்து சென்ற 23 மீன்பிடி படகுகள் மற்றும் 140 மீனவர்கள் உடனடியாக காவல் நீடிப்பின்றி விடுதலை செய்யப்பட இந்திய அரசு விரைவான, திட்டவட்டமான நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஏற்கனவே இலங்கை சிறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த 69 மீனவர்கள் வாடி வருவதையும், அவர்களின் 47 படகுகளும், மீன்பிடி சாதனங்களும் இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு பதில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்