முக்கிய செய்திகள்:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, விலையை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் விலைவாசி உயர்விற்கு எதிராக வாக்கு என்னும் அம்பினை மக்கள் எய்தியும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விநியோகத் தொகையை 3 ரூபாய் 46 காசு ஏற்றி, அதனை மக்கள் மீது சுமத்தியிருப்பது, பழிக்குப் பழி என்ற எண்ணத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுவது போல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாதாமாதம் டீசல் விலையையும், பெட்ரோல் விலையையும் ஏற்றி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, வாகன உரிமையாளர்களையும், பொதுமக்களையும் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கி வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தற்போது ஏழை, எளிய தாய்மார்களின் வயிற்றிலும் அடித்துள்ளது - மத்திய அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது - விண்ணை முட்டும் விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், இது போன்று விலைவாசி உயர்விற்கு வித்திடும் செயலைச் செய்து கொண்டே இருப்பது முற்றிலும் நியாயமற்றது என்றும், இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்ற செயலாகும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை 9 என்று குறைத்து, ஏழை, எளிய நடுத்தர மக்களின் மீது தாங்கொணா சுமையை மத்திய காங்கிரஸ் அரசு சுமத்தியது - 2011 ஆம் ஆண்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு உயர்த்திய போது, ஏழைத் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில், மாநில அரசுக்கு உள்ள குறைந்த நிதி ஆதாரத்தையும் பொருட்படுத்தாமல், அதன் மீதான மதிப்புக் கூட்டு வரியை தாம் முழுவதுமாக ரத்து செய்ததாக சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 120 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது மானிய விலையிலான எரிவாயு உருளை விலையை மத்திய காங்கிரஸ் அரசு 3 ரூபாய் 46 காசு உயர்த்தி உள்ளது - முகவர்களுக்கு வழங்கப்படும் முகவர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று தெரிவித்தாலும், இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - விலைவாசி விஷம் போல் ஏறி உள்ள இந்தச் சூழ்நிலையில், உயர்த்தப்பட்ட முகவர் கமிஷனை மத்திய அரசே ஏற்றுக் கொள்வதுதான் நியாயமானது - அதனை விடுத்து இந்தச் சுமையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களின் உணர்வுகளுக்கு கிஞ்சித்தும் மதிப்பு அளிக்காத நிலையையே காட்டுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இதன் விலையை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்