முக்கிய செய்திகள்:
ஆர்.பி. உதயகுமார் அமைச்சராக பதவியேற்பு - ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக திரு. R.B. உதயகுமார், இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. R.B. உதயகுமார், புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமைச்சர் பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.45 மணியளவில் நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக ஆளுனர் மாளிகைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலதாவிற்கு, தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், ஆளுனரின் செயலாளர் திரு. ரமேஷ்சந்த் மீனா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், நிகழ்ச்சி அரங்கிற்கு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, ஆர்.பி.உதயகுமாரை, ஆளுனருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், அமைச்சராக திரு. R.B. உதயகுமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில், சபாநாயகர் திரு. ப.தனபால், அமைச்சர்கள் திரு. ஒ.பன்னீர்செல்வம், திரு. நத்தம் ஆர்.விசுவநாதன், திரு. கே.பி.முனுசாமி, திரு. வைத்தியலிங்கம் உள்பட அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்