முக்கிய செய்திகள்:
அரசு எடுத்து வரும் அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் சென்றடைய மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் ஜெயலலிதா, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மாநாட்டில் வேண்டுகோள்

மக்களின் வளர்ச்சிக்கும், நலனுக்காகவும் அரசு எடுத்து வரும் அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் சென்றடையவும், நல்ல நிர்வாகத்தை தொடர்ந்து வழங்கவும், மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, இன்று முதல், வரும் 13-ம் தேதிவரை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இம்மாநாட்டின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைந்த கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக, தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கிற்கு வருகை புரிந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், காவல்துறை தலைவர் திரு. ராமானுஜம் ஆகியோர் வரவேற்புரையாற்றினார். இதனையடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, மக்களின் வளர்ச்சிக்கும், நலனுக்காகவும் அரசு எடுத்து வரும் அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் சென்றடையவும், நல்ல நிர்வாகத்தை தொடர்ந்து வழங்கவும், மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த முறை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தாம் அறிவித்த 346 அறிவிப்புகளில், 332 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், அரசு துறை செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டமும், 13-ம் தேதி, காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்