முக்கிய செய்திகள்:
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி - கழக வேட்பாளர் சரோஜா, 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி. P. சரோஜா, 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார். தமிழக மக்கள் நலனுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திவரும் எண்ணற்ற நலத்திட்டங்களை முழுமையாக அங்கீகரித்து, அவரது தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு தொடர்ந்து பேராதரவு தரும் வகையில், ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், கழக வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் நடப்பு சட்டப்பேரவையில் ஏற்காடு தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த திரு. செ. பெருமாள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவரது மனைவி திருமதி. P. சரோஜாவை, ஏற்காடு இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 28ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா, ஏற்காடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக வேட்பாளருக்கு ஆதரவாக, தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். முதலமைச்சர் ஜெயலலிதா சென்ற இடமெல்லாம், பல்லாயிரக்கணக்கான, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்து, அ.இ.அ.தி.மு.க.வுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், கடந்த 4ம் தேதி நடைபெற்றது. வரலாறு காணாத வகையில், இத்தேர்தலில் 90 சதவீத வாக்குகள் பதிவாயின. பெண்கள், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் நின்று, மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில், பலத்த பாதுகாப்புக்கிடையே நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்தே, அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்தது. முதல் சுற்று எண்ணிக்கை முடிவில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி. P. சரோஜா, 5,126 வாக்குகள் பெற்றிருந்தார். இது, தி.மு.க. வேட்பாளரை விட, 2,,344 வாக்குகள் அதிகமாகும். இதனையடுத்து, ஒவ்வொரு சுற்றிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் பன்மடங்கு அதிகரித்த வண்ணம் இருந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே, காலையில் இருந்தே பெருந்திரளாகக் கூடியிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு சுற்று முடிவு அறிவிக்கப்படும்போதும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கழகத்தின் வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடிய வண்ணம் இருந்தனர்.

மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அனைத்து சுற்றுக்களிலும், அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்தது. கழக வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் பெருமளவில் உயர்ந்துகொண்டே வந்தது.

21-வது சுற்றின் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி. P. சரோஜா, மொத்தம், ஒரு லட்சத்து 42,771 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். தி.மு.க. வேட்பாளர், 64,655 வாக்குகள் மட்டுமே பெற்று, படுதோல்வியடைந்தார். கழக வேட்பாளர் திருமதி. சரோஜா, 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றியை, தேர்தல் அதிகாரி, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றிருப்பதை, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மேலும் செய்திகள்