முக்கிய செய்திகள்:
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் - பலத்த பாதுகாப்புக்கிடையே நாளை வாக்கு எண்ணிக்கை

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நாளை நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த புதன்கிழமையன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், வரலாறு காணாத வகையில் சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட 290 வாக்குச்சாவடிகளிலும் வாக்குகள் பதிவான அனைத்து மின்னணு இயந்திரங்களும், சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை, பிற்பகலுக்குள் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நாளை நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்