முக்கிய செய்திகள்:
ஏற்காடு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு : 89 புள்ளி இரண்டு நான்கு சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தகவல்

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், 89 புள்ளி இரண்டு நான்கு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு, நடுநிலையோடு, அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சுமுகமான முறையில் நடைபெற்றதாகவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களித்ததாகவும், ஏற்காடு தொகுதி தேர்தல் அதிகாரியும், சேலம் மாவட்ட ஆட்சியருமான திரு. மகரபூஷணம் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏற்காடு தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான திரு. மகரபூஷணம், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

இந்த தேர்தலில், 89 புள்ளி இரண்டு நான்கு சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த திரு. மகரபூஷணம், 1 லட்சத்து 5 ஆயிரத்து 620 ஆண்களும், 1 லட்சத்து, 8 ஆயிரத்து 820 பெண்களும், 4 திருநங்கைகளும் வாக்களித்ததாகக் கூறினார். ஆண்களைக் காட்டிலும், பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்தாகவும் திரு. மகரபூஷணம் தெரிவித்தார்.

ஏற்காடு தொகுதியின், 290 வாக்குச் சாவடிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியைச் சுற்றிலும் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 8-ம் தேதி வரை, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்